12/04/2023 (769)
அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:
அறத்துப்பாலில், இல்லறவியலில், அடக்கமுடைமை அதிகாரத்தில் ஒரு குறள் வைத்துள்ளார். நமக்கெல்லாம் நன்றாகத் தெரிந்த குறள்தான்!
“யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.” --- குறள் 127; அதிகாரம் – அடக்கமுடைமை
யாகாவார் ஆயினும் நாகாக்க = தம்மால் எதையெல்லாம் காக்க வேண்டுமோ அதனையெல்லாம் காக்காவிட்டாலும், நாவை மட்டுமாவது காத்துக் கொள்க; காவாக்கால் சொல்லிழுக்குப்பட்டு சோகாப்பர் = அப்படி, நாக்கை அடக்க முடியாவிட்டால் சொற் குற்றத்தினால் தமக்குத் தாமே துன்பம் விளைவித்துக் கொள்வர்.
தம்மால் எதையெல்லாம் காக்க வேண்டுமோ அதனையெல்லாம் காக்காவிட்டாலும், நாவை மட்டுமாவது காத்துக் கொள்க; அப்படி, நாக்கை அடக்க முடியாவிட்டால் சொற் குற்றத்தினால் தமக்குத் தாமே துன்பம் விளைவித்துக் கொள்வர்.
‘சோ’ என்பது ஓரெழுத்து ஒரு மொழி. ‘சோ’ என்றால் அரண், மதில், சிறை என்று பொருள்படும். சோகாப்பர் = சோ+காத்திருப்பர், எனவே ‘சிறைத்தண்டனை’ என்பது பொருள் என்கிறார் தேவநேயப் பாவாணர் பெருமான்.
சோகம்+கா = சோகா; எனவே சோகாப்பர் என்பது ஒரு சொல் என்றும் அதன் பொருள் துன்பமுறுவர் என்றும் பரிமேலழகப் பெருமான் பொருள் சொல்கிறார்.
உதாரணம்: ஏமம் + கா = ஏமா; பொச்சம் + கா = பொச்சா.
தண்டபாணி தேசிகப் பெருமான் சிறைத்தண்டனையும் பெரும் துன்பம்தான் என்பதால் பொதுப்பட துன்பத்திற்கும் ஆகுமென்றார்.
மணக்குடவப் பெருமான், சோகாப்பர் என்பதை சோகிப்பர் என்றார். அதாவது சோகமுறுவர், வருந்துவர் என்றார்.
எது எப்படியோ, வாயைவிட்டால் சிறைத்தண்டனை என்றாகிவிட்டது கண்கூடு!
இது நிற்க.
நேற்று, குறள் 641 இல், எந்த அழகையும்விட சொல்லழகு சிறப்பு என்று பார்த்தோம். காண்க 11/04/2023.
அழகு என்றால் அதனை அழகாகத்தான் வெளிப்படுத்த வேண்டும். அழகினால் ஆக்கமும் உண்டு; கேடும் உண்டு!
அதனாலும், அதனைக் காக்க வேண்டும்.
எதனை? அதாங்க நம்ம நாக்கைத்தான்!
“ஆக்கமும் கேடும் அதனால் வருதலால்
காத்தோம்பல் சொல்லின்கண் சோர்வு.” --- குறள் 642; அதிகாரம் – சொல்வன்மை
ஆக்கமும் கேடும் அதனால் வருதலால் = உயர்வும் தாழ்வும் நாம் பேசும் பேச்சினால் வருவதால்; சொல்லின்கண் சோர்வு காத்தோம்பல் = சொற்களைப் பயன்படுத்துவதில் கொஞ்சம்கூட ஏமாந்துவிடக்கூடாது.
உயர்வும் தாழ்வும் நாம் பேசும் பேச்சினால் வருவதால், சொற்களைப் பயன்படுத்துவதில் கொஞ்சம்கூட ஏமாந்துவிடக்கூடாது.
சொல்வன்மை அதிகாரத்தின் முதல் இரண்டு பாட்டாலும் சொல்லின் முக்கியத்துவத்தைச் சொன்னார்.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Comments