08/11/2022 (614)
நம்மாளு: ஐயா, வலியறிதலில், “ஆற்றின் அளவறிந்து”ன்னு சொன்னீங்க. அந்த அளவே மிகவும் சிறியதாக இருந்தால் என்ன செய்வது? எப்படி சமாளிப்பது? பொருள் வரும் வழிகள் எல்லாம் தடைபட்டு இருக்கு.
ஆசிரியர்: இந்தக் கேள்வியை நம்ம பேராசானிடம் ஏற்கனவே கேட்டுட்டாங்க. நாம் அந்தக் குறளையும் ஏற்கனவே பார்த்துள்ளோம். காண்க - 20/08/2021 (178).
மீள்பார்வைக்காக:
“ஆகாறு அளவிட்டது ஆயினும் கேடில்லை
போகாறு அகலாக் கடை.” --- குறள் 478; அதிகாரம் – வலியறிதல்
ஆகு ஆறு அளவு இட்டது ஆயினும் கேடில்லை = பொருள் வரும் வழி சின்னதாக இருந்தாலும் தப்பில்லை; போகு ஆறு அகலாக் கடை = பொருள் போகின்ற வழி பெரிதாக இல்லாமல் இருந்தால் போதும்.
பொருள் வரும் வழி சின்னதாக இருந்தாலும் தப்பில்லை; பொருள் போகின்ற வழி பெரிதாக இல்லாமல் இருந்தால் போதும்.
உழைத்து பொருள் ஈட்டுபவர்கள் உயர்வதற்கு இதுதான் காரணம்.
அவனுக்கு என்னப்பா அதிர்ஷ்டம் (Luck) அடிக்குதுன்னு சொல்வாங்க. இந்த luckக்கு அடிப்படையே எல்லாச் செயல்களையும் “அளவறிந்து” செய்வதுதான்!
இதில் கவனம் வைக்காமல்தான், பணம் படைத்தவர்கள் செல்வங்களை இழக்கிறார்கள்.
‘அளவறிந்து வாழவேண்டும்’ என்கிறார் நம் பேராசான். அப்படி இல்லாமல், எனக்கென்ன கவலை, வேண்டும் போது பணம் வருகின்றது. நான் ஏன் அலட்டிக் கொள்ள வேண்டும் என்றால் அருட்கொடைகளை அலட்சியப் படுத்துகிறார்கள் என்று பொருள்.
அவர்களின் வாழ்க்கை பள பளப்பாக இருப்பது போல தோன்றும். விரைவிலேயே, உண்மை நிலையைக் காலம் காட்டிக் கொடுத்துவிடும்.
சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும்! நான் சொல்லலைங்க நம்ம பேராசான் இப்படி சொல்கிறார்:
“அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும்.” --- குறள் 479; அதிகாரம் – வலியறிதல்
அளவறிந்து வாழாதான் வாழ்க்கை = பொருள் வரும் எல்லை அறிந்து வாழாதான் வாழ்க்கை;
உளபோலஇல்லாகித் தோன்றாக் கெடும் = முதலில் அவனிடம்நிறைய இருப்பது போல ஒரு தோற்றத்தைத் தந்து, பின் அவனின் உண்மை நிலையான இல்லாமை வெளிப்பட்டு முடிவில் அதுவும் இல்லாமல் கெடும்.
பொருள் வரும் எல்லை அறிந்து வாழாதான் வாழ்க்கை, முதலில் அவனிடம் நிறைய இருப்பது போல ஒரு தோற்றத்தைத் தந்து, பின் அவனின் உண்மை நிலையான இல்லாமை வெளிப்பட்டு, முடிவில் அதுவும் இல்லாமல் கெடுமாம்.
அதாவது, அவன் மீண்டும் தலை தூக்குவதும் கடினம் என்கிறார்.
அளவு, அளவு, அளவு எல்லாவற்றிலும் அளவு. அதுதான் மிக முக்கியம்.
நன்றி. மீண்டும் சந்திப்போம்.
உங்கள் அன்பு மதிவாணன்
Comments