top of page
Search
Writer's pictureMathivanan Dakshinamoorthi

ஆங்கமை வெய்தியக் கண்ணும் ... 740

17/06/2023 (835)

அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:

நம்ம பேராசான் ஒன்பது குறள்களில் கூறியபடி ஒரு நாடு இருக்கு என்றாலும் அதற்கு மேல் ஒன்று இருக்கணுமாம். அந்த ஒன்று மட்டும் சரியாக அமையவில்லை என்றால் எந்த பயனும் இல்லையாம். இப்படித்தான் சொல்கிறார்!


அந்த ஒன்று என்ன?

அதுதான் அரசு, தலைமை என்கிறார்! அந்தக் காலத்தில் மன்னர்கள் ஆட்சி. பெரும்பாலான மன்னர்கள் மக்களை நசுக்கித்தான் ஆட்சி செய்துள்ளார்கள். அதனால்தான், ஆங்காங்கே, மக்கள் சக்தி வெகுண்டெழுந்து மன்னராட்சியை மாற்றி மக்களாட்சியைக் (Democracy) கொண்டு வந்தார்கள்.


“தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா இப்பயிரை

கண்ணீரால் காத்தோம் கருகத் திருவுளமோ?” என்றார் மகாகவி பாரதி.


பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் உயிரினை ஈந்து வந்த மாற்றம் இந்த மக்களாட்சி. இதைக் குறித்து அமெரிக்க குடியரசின் தலைவராகப் பொறுப்பேற்ற ஆப்ரஹாம் லிங்கன் (Abraham Lincon), 1863 இல் ஆற்றிய “கெட்டிஸ்பெர்க் உரை” சிந்திக்கத்தக்கது. அதில்தான் “...மக்களில் இருந்து, மக்களுக்காக, மக்களுக்காகவே” என்றார்.


“... இந்த நாட்டிற்காக உயிரை ஈந்தவர்கள் ஒரு நாளும் அவர்களின் செயல்கள் வீணாகப் போகும் என்று நினைத்திருக்கமாட்டார்கள் – இந்த நாடு, இறைவனின் கீழ் இயங்கும் இந்த நாடு, ஒரு நாள் புது வடிவம் எடுக்கும். அப்போது, மக்களுக்கு உண்மையான சுதந்திரமும், மக்களில் இருந்து, மக்களால், மக்களுக்காகவே அந்த அரசு அமையும். அது ஒரு நாளும் இந்த உலகில் இருந்து அழிக்க முடியாததாக இருக்கும்.”

(என்ற எண்ணத்தோடுதான் தங்கள் உயிரை விதைத்திருப்பார்கள்.)


“that these dead shall not have died in vain– that this nation, under God, shall have a new birth of freedom and that government of the people, by the people, for the people, shall not perish from the earth” (U.S. President Abraham Lincoln, The Gettysburg Address, November 19, 1863)


மக்களாட்சியிலும் மன்னர்கள் தோன்றிவிடுகிற காலமாக இந்தக் காலம் இருக்கிறது. இது நிற்க.


நாம் குறளுக்கு வருவோம்.


ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே

வேந்தமை வில்லாத நாடு.” --- குறள் 740; அதிகாரம் – நாடு

பயம் = பயன்; வேந்து அமைவு இல்லாத நாடு = நல்லத் தலைமை இல்லாத நாடு; ஆங்கு அமைவு எய்தியக் கண்ணும் பயம் இன்றே = மேலே சொன்ன இலக்கணங்கள் பலவற்றை ஒருங்கே பெற்றிருந்தாலும் பயன் இல்லை.


நல்லத் தலைமை இல்லாத நாடு, மேலே சொன்ன இலக்கணங்கள் பலவற்றை ஒருங்கே பெற்றிருந்தாலும் பயன் இல்லை.


மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.




1 Comment


Unknown member
Jun 17, 2023

Very True..

Like
Post: Blog2_Post
bottom of page