05/03/2023 (731)
ஐயா, குடி ஆண்மை உள்வந்த குற்றம் மடி ஆண்மை மாறக் கெடும் என்றார் குறள் 609ல். அங்கே இருந்து தொடங்க வேண்டும்.
ஆசிரியர்: சரி தம்பி, ஓணத்தைப் பற்றி சொல்லச் சொன்னேனே? சொன்னீர்களா?
நம்மாளு: குருநாதா நீங்க சொல்லி நான் செய்யாமல் இருப்பேனா?
ஆசிரியர்: என்ன சொன்னீங்க தம்பி?
நம்மாளு: ஐயா, ஓணம்ன்னு ஒரு பண்டிகை இருக்கு, அன்றைக்கு “கானம் விற்றாவது ஓணம் உண்” என்று சொல்லியிருக்கிறார்கள், அதனால், அன்றைக்கு ஓணம் சாத்யாவை எல்லாரும் சாப்பிடுங்கோன்னும் எடுத்துச் சொன்னேன் குருநாதா.
ஆசிரியர்: ம்ம்... அப்புறம் ...
நம்மாளு: ங்கே... (நான் என்ன செய்ய?)
ஆசிரியர்: ஆமாமாம். சாப்பாடு ரொம்ப முக்கியம்! சரி, தம்பி. உங்களுக்குத் தெரிந்ததைச் சொன்னீங்க. ஓணத்தைப் பற்றி தொடர்வோம் என்றார். (இவ்வளவுதான் அவர் கடிந்து கொள்வது. அதனால்தான் நான் தப்பிக்கிறேன்!)
அவர் சொன்னவை உங்களுக்கு அப்படியே.
ஓணம் அதாங்க நம் மலையாள தேசமான கேரளாவில் கொண்டாடப்படும் மிகப் பெரிய விழா. அங்கே, மகாபலி என்றும் பகாபலி என்றும், மாவலி என்றும் அழைக்கப்பட்ட ஒரு மன்னன் ஆட்சி செய்து கொண்டிருந்தாராம். இவர் ஒரு கொடை வள்ளல். இல்லை என்போருக்கு இல்லை என்று உரையா இதயம் கொண்டவர்.
மகாவலி பிரகலாதனின் பேரன். இறைவன் நரசிம்மர் அவதாரமாக வந்து அழித்த இரண்ய கசிபு இருக்கிறாரே அவரின் மகன்தான் பிரகலாதன். பிரகலாதனின் மகன் விரோசனன். விரோசனின் மகன்தான் நம்ம மகாவலி சக்கரவர்த்தி. இவர்கள் எல்லோரும் நமது இதிகாசங்களில் வரும் மாந்தர்கள்.
இதிகாசம் என்றால் “இப்படித்தான் இருந்தது” என்று பொருள். இதி-ஹ-ஆச என்று பிரித்து என்று பொருள் சொல்கிறார்கள் சமஸ்கிருதத்தில்.
திருமால் இங்கு இருக்கின்ற காலத்தில், இந்த குற்றமற்ற உலகம் ஒடுங்கத்தக்க வகையில் ஆண் பன்றியின் பலத்தோடு இருந்த மாவலி என்பான் வானத்தையும், வையத்தையும் தனது ஆட்சியின் கீழ் கொண்டுவந்தான் என்கிறார் நம் கம்பநாடப் பெருமான்.
“ஆனவன் இங்கு உறைகின்ற அந் நாள்வாய்
ஊனம் இல் ஞாலம் ஒடுங்கும் எயிற்று ஆண்
ஏனம் எனும் திறல் மாவலி என்பான்,
வானமும் வையமும் வவ்வுதல் செய்தான்.” --- கம்பராமாயணம்; பால காண்டம்; வேள்விப் படலம்; பாடல் 8
(ஏனம் = பன்றி; ஞாலம் = உலகம்; வவ்வுதல் = கவர்தல், ஆட்சி செய்தல்; எயிற்று = பற்கள்)
பின், அந்த மாவலி விண்ணவர்களை இங்கு வேள்விகள் செய்ய அனுமதிக்கவில்லையாம். அதனால், அவர்கள் திருமாலிடம் வேண்ட எம்பெருமான் வாமன அவதாரம் எடுத்து அவனிடம் சென்று மூன்று அடி நிலம் கேட்டாராம்.
அப்போது, திருமாலின் உள்ளத்தை அறிந்த மாவலியின் குரு சுக்கிராச்சாரியர் அந்த மாவலியை ஒரு செய்தி சொல்லனும். கொஞ்சம் அருகில் வா என்றாராம். அவன் காதருகில் சொன்னாராம். “வந்திருப்பது யார் என்று தெரியுமா? உருவத்தைப் பார்த்து ஏமாறாதே! உன்னை அழிக்க வந்திருக்கும் இந்த குள்ள வடிவம் ஒரு சமயம் இந்த உலகத்தையே விழுங்கிய திருமால், நீ உணர்ந்து கொள்” என்றாராம்.
”கண்ட திறத்து இது கைதவம்; ஐய!
கொண்டல் நிறக் குறள் என்பது கொள்ளேல்;
அண்டமும் முற்றும் அகண்டமும், மேல்நாள்,
உண்டவன் ஆம்; இது உணர்ந்துகொள்” என்றான். --- கம்பராமாயணம்; பால காண்டம்; வேள்விப் படலம்; பாடல் 16
(குறள் – குறளன் – குள்ள வடிவம்; கைதவம் = வஞ்சனை)
“அது நினைப்பதற்கில்லை! இதை நினைத்துப் பார்க்கவில்லை நீங்கள்! நீங்கள் சொல்வது உண்மையென்றால். என் கை உயர, தனக்கு தாழ்வே இல்லாத பெருமான் கை தாழ்வது என்றால், இதற்கும் மேல் எனக்கு வரும் பெரும்பேறு என்ன இருக்க முடியும் ஆச்சாரியாரே ...” என்றார் மாவலி
”நினைக்கிலை; என் கை நிமிர்ந்திட வந்து,
தனக்கு இயலாவகை தாழ்வது, தாழ்வு இல்
கனக் கரியானது கைத்தலம் என்னின்,
எனக்கு இதன்மேல் நலம் யாது கொல்?” --- கம்பராமாயணம்; பால காண்டம்; வேள்விப் படலம்; பாடல் 17
(கனம் = மேகம்)
நாளை தொடரலாம் என்றார் ஆசிரியர்.
ஏதோ ஒரு காரணமாகத்தான் இந்த மாவலியின் கதை வருகிறது என்று மட்டும் புரிகிறது. ஆசிரியர் இதை எப்படி விரிக்கிறார் என்று பார்ப்போம்.
மடி ஆண்மையை மாற்றுவதை மட்டும் மறந்துடாதீங்க! அதாங்க, சோம்பலைத் தவிர்பது!
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)
Comments