27/02/2021 (41)
நன்றி, மகிழ்ச்சி, வாழ்த்துகள்.
நேற்று ஒரு நண்பர் அலைபேசியிலே அழைத்து கேட்டார், ‘அருள்’ இல்லறத்திலே இருக்கறவங்களுக்கு தேவையில்லையான்னு?
அதுக்கு ஆசிரியர் என்ன சொன்னாருன்னா: அஃதாவது, ‘அன்பு’ minimum qualification’ – குறைந்த பட்ச தகுதி, மேலும், அன்பு வளர, வளர உங்களை அறியாமலே ‘அருள்’ வந்துடும். நல்ல கேள்விதான்னு ஒரு பாராட்டும் போட்டாரு. :-)
ஆசிரியர் மேலும் தொடர்ந்தார்:
இல்லறவியலில் அதிகாரங்கள் 20, (5 ல் தொடங்கி 24 வரை) குறள்கள் 200 (41லிருந்து 240 வரை); துறவறவியலில் அதிகாரங்கள் 13, (25 ல் தொடங்கி 37 வரை) குறள்கள் 130 (241லிருந்து 370 வரை). சும்மா தெரிஞ்சு வைச்சுப்போம். பின்னாடி பயன்படும்!
நம்மாளு: ஐயா, நேற்றய…
இதோ வந்துடறேன். துறவறத்தில் இருப்பவர்களுக்கு எது இன்பம் பயக்கும்? இது தானே கேள்வி?
துறப்பது தான் இன்பம் பயக்கும்! அதுக்கு முதல்ல ‘அவா’ வை அறுத்துடனம். அறுக்கறதுன்னா கத்தி கொண்டல்ல! புத்தியைக் கொண்டு. கடைசியிலே, அந்த ‘புத்தியையுமே’ அறுத்துடனும் – இதை விரிச்சா வளரும். நிற்க. அந்த நிலையிலிருந்து சொன்னது தான் புத்த பெருமான், ரமண மகான் போன்றவர்களின் அருளுரைகள்.
வள்ளுவப்பெருந்தகை, இல்லறத்திலே ‘இல்வாழ்க்கை’ அதிகாரத்தை முதல்ல வைத்தவர், துறவிக்கு தேவையான ‘அவாஅறுத்தல்’ ல கடைசி அதிகாரமாக வைச்சு இருக்காரு. ஏன்? யோசிப்போம்.
அதிலே கடைசி குறள்:
“ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும்.” 370
ஆரா இயற்கை = அடங்காத, நிறைவாகாத தன்மையுடைய; அவா = விருப்பம்; நீப்பின் = நீக்கிட்டா; அந்நிலையே = அந்த நிலையே; பேரா இயற்கை தரும் = நிலைத்த, மாறுபாடில்லா தன்மையைத் தரும்.
இங்கே ஒரு நுணுக்கத்தை உரை ஆசிரியர்கள் வைக்கிறாங்க. இல்லறத்திலே ‘அவா’ ங்கிற சொல்லுக்கு ‘பேராசை’ன்னு சொன்னவங்க, துறவறவியல்ல வெறும் ‘ஆசை’ ன்னு சொல்றாங்க! சின்ன, சின்ன ஆசையையுமே நீக்கணுமா? அதனாலே என்ன பயன்னு ஒரு குறளில் சொல்லியிருக்காரு, தேடலாம் வாங்க.
குறள்மணி அனுப்பின குறளும் சிறப்பான குறள்தான்னு சொல்லிட்டு நாளைக்கு பார்க்கலாம்ன்னு கிளம்பிட்டார் ஆசிரியர்.
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன்,
உங்கள் அன்பு மதிவாணன்.
Comments