top of page
Search

ஆரா இயற்கை அவாநீப்பின் ... 370, 355,

21/01/2024 (1051)

அன்பிற்கினியவர்களுக்கு:

நிலையாமையை உணர்தல் முதல் நிலை ஞானம்.

ஆக்கிய பொருள்கள் அழியும். அவற்றின் மீது பற்று வைத்தல் துன்பத்தைத் தரும். எனவே, படிப்படியாக அந்தப் பற்றுகள் நீங்க, அவற்றால் உண்டாகும் துன்பங்களும் படிப்படியாக நீங்கும் என்பது துறவின் அடிப்படை. இஃது, இரண்டாம் நிலை ஞானம் என்று சிந்தித்தோம்.

 

எப்பொரு ளெத்தன்மைத் தாயினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு. – 355; - மெய்யுணர்தல்

 

எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் = எந்த பொருளாக இருந்தாலும் அது எத்தகையப் பண்புகளைப் பெற்றிருந்தாலும்; அப்பொருள் மெய்ப் பொருள் காண்பது அறிவு = அப்பொருளின் ஆகக் கடைசியான உள்பொருளை உணர்வது அறிவு.

 

எந்த பொருளாக இருந்தாலும் அது எத்தகையப் பண்புகளைப் பெற்றிருந்தாலும், அப்பொருளின் ஆகக் கடைசியான உள்பொருளை உணர்வது அறிவு.

 

இடம் விட்டு இடம் சென்று இயங்கும் பொருள்; ஓரிடத்தில் இருக்கும் பொருள் என்று பொருள்களைப் பிரிக்கலாம்.  இதுமட்டுமல்லாமல், பொருள்களைப் பல வகையில் பகுக்கலாம் அவற்றின் பண்புகளைக் கொண்டு!

 

பொருள்களுக்குச் சிறப்பு என்றும், பொது என்றும் பண்புகள் இருக்கும். மரம் என்பது பொது என்றால், மரத்தின் பண்புகள் அமைந்து அதில் மாம்பழமும் விளைந்தால் அது மாமரம். மா என்பது சிறப்புப் பண்பு.

 

இவ்விரு பண்புகளையும் விலக்கிப் பார்க்க வேண்டும்.  “நான் யார்?” என்று பகவான் ரமணமகரிஷி தேடச் சொன்னாற்போல், எல்லாப் பண்புகளையும் விலக்கிக் கொண்டே போனால், எல்லாவற்றிற்குமான காரிய காரணங்கள் தோன்றும். அவற்றையும் விலக்கிக் கொண்டும், விளங்கிக் கொண்டும் ஆழச் சென்றால், அதற்கும் மேல் செல்ல இயலா உள்பொருள் தோன்றும். அதுதான் மெய்ப்பொருள் என்கின்றனர் அறிஞர் பெருமக்கள்.

 

இதைத்தான் சாக்ரடீஸ் பெருமானார் “உன்னையே நீயறிவாய்” என்றார்.

 

நம் பேராசான், முற்றும் துறந்த நீத்தார்களின் பெருமையைச் சொல்லும்போது கீழ்காணும் குறளில் சொன்னார். காண்க 10/08/2021.

 

சுவையொளி ஊறோசை நாற்றமென் றைந்தின்

வகைதெரிவான் கட்டே உலகு. - 27; - நீத்தார் பெருமை

 

அந்த ஐந்தின் வகைகளை அறிந்து கொண்டவர் தன்னைத் தானே அறிந்து கொண்டவர். அதுதான் மெய்யுணர்தல். அஃதாவது, பொருள்கள் எத்தன்மைத்து ஆயினும், அப்பொருளின் உண்மைத் தன்மையைக் காண்பது. இஃது உள்முகமாகத் தேடும் பயிற்சி. இதுவே, மூன்றாம் நிலை ஞானம்.

 

மெய்ஞ்ஞானப் புலம்பலில் பத்திரகிரிப் பெருமான்:

ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனைச் சுட்டறுத்துத்

தூங்காமல் தூங்கிச் சுகம் பெறுவது எக்காலம்” என்றார். காண்க 20/04/2022.

 

ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே

பேரா இயற்கை தரும். – 370; - அவா அறுத்தல்

 

ஆரா இயற்கை அவா நீப்பின் = முடிவில்லாத இந்த இயற்கையில் உள்ள பொருள்களின் பண்புகளை விலக்கி, காரண காரியங்களை அறிந்து ஆய்ந்து கொண்டே சென்றால் அது ஒரு புள்ளியில் இணையும். அப்போது அவா அற்றுப் போகும்; அந் நிலையே பேரா இயற்கை தரும் = அந்த நிலையே மனத்திற்கு அமைதியான, அழிவில்லா இயற்கையான நிலையைத் தரும்.

 

முடிவில்லாத இந்த இயற்கையில் உள்ள பொருள்களின் பண்புகளை விலக்கி, காரண காரியங்களை அறிந்து ஆய்ந்து கொண்டே சென்றால் அது ஒரு புள்ளியில் இணையும். அப்போது, அவா அற்றுப் போகும். அந்த நிலையே மனத்திற்கு அமைதியான, அழிவில்லா இயற்கையான நிலையைத் தரும்.

 

இதுவே நான்காம் நிலை ஞானம், அஃதாவது, ஞானம் அடைதலின் ஆக உயரிய நிலை எதுவென்றால் அவா அறுத்தல். அந்த நிலைக்குச் சென்றால் அவா என்னும் ஒன்று முற்றாக நீங்கிவிடும்.

 

பயணிப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.




Commenti


Post: Blog2_Post
bottom of page