07/11/2022 (613)
“ஆத்துலே போட்டாலும் அளந்து போடு”ன்னு ஒரு பழமொழி இருக்கு. இதற்கு பல வகையிலே பொருள் சொல்கிறார்கள்.
சிலர், “அகத்திலே போட்டாலும் அளந்து போடு” என்பது மருவி இப்படி ஆகிவிட்டது. இதன் பொருள் “உண்ணும் உணவை அளந்துதான் சாப்பிடனும்”. இதுதான் சரியான பழமொழி என்கிறார்கள். கருத்து என்னமோ கவனிக்கத் தகுந்ததுதான்.
“ஆத்திலே” என்பதற்கு “வீட்டிலே” என்று பொருள் கண்டு வீட்டுக்குச் செலவு செய்தாலும் அளந்து செய்யனும் என்கிறார்கள் சிலர்.
சிலர் எப்படி விளக்குகிறார்கள் என்றால் ஒரு பொருளை தேவையில்லை என்று ஆற்றிலே தூக்கிப் போட்டாலும் அதையும்கூட நன்றாக சிந்தனை செய்து அளந்துதான் போடனும் என்கிறார்கள்!
மேலும் சிலர், ஆற்றிலே தூக்கிப் போடுவதற்கு அளந்து போட்டால் என்ன?, அளந்து போடா விட்டால் என்ன? வேற வேலையைப் பாருங்கப்பா. என்ன பழமொழி இது. இந்தப் பெருசுங்களுக்கு வேற வேலையில்லை என்கிறார்கள்.
சரி, இந்தப் பழமொழிக்கு யார் காரணம் என்றால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். அவர் யாருமில்லை. நம்ம பேராசான்தான் காரணம்!
நம்ம பேராசான் “ஆற்றின் அளவறிந்து ஈக” என்கிறார் வலியறிதல் அதிகாரத்தின் ஏழாவது குறளில்.
சரி, எதற்கு என்பதையும் அடுத்து சொல்கிறார். “அது பொருள் போற்றி வழங்கும் நெறி” என்கிறார்.
நம்ம பேராசான் என்ன சொல்கிறார் என்றால் பொருள் வரும் அளவினை அறிந்து கொடுக்க வேண்டுமாம். அதாவது, நமக்கு எவ்வாறு பொருள் வந்து சேருகிறது, அதன் எல்லை என்ன என்பதெல்லாம் கவனத்தில் வைக்க வேண்டுமாம். இதை யாருக்குச் சொல்கிறார் என்றால் அரசர்களுக்கு, தலைவர்களுக்கு, தலைமை நிலையை அடைய வேண்டியவர்களுக்கு...
இது துறவிகளுக்கு அல்ல.
எல்லா குறள்களும் எல்லோருக்குமானது அல்ல. திருக்குறள் பொதுமறைதான். அனைவருக்கும் பொதுவானதுதான். ஆனால், அதில் இருக்கும் குறள்கள் அனைத்தும் அனைவருக்கும் பொருந்தாது.
இது எப்படி சரியாக இருக்கும் என்று கேட்கிறீர்களா?
அதற்குத்தான், பகுதி, பகுதியாகப் பிரித்து தலைப்பிட்டு எழுதியுள்ளார் நம் பேராசான்.
இதை நாம் ஏற்கனவே பார்த்துள்ளோம். மீள் பார்வைக்காக காண்க 25/02/2021 (39).
சுருக்கமாக:
“இந்திய அரசியலமைப்பு சட்டம் (Constitution of India) அனைவருக்கும் பொது. ஆமாங்க, இந்திய குடிமக்களுக்கு மட்டுமல்ல, யார், யார் இந்தியாவிற்குள் இருக்கிறார்களோ அவர்கள் அனைவருமே அதன் கீழ்தான் வர வேண்டும். எல்லோரும் சட்டத்தின் முன் சமம்(all are equal before the law). ‘சமம்’ ங்கிற வார்த்தை சமமா இருக்கிறவங்க இடையே தான் ‘சமம்’ன்னு எடுத்துக்கனும். (equal among equals). ஒன்றாம் வகுப்பு படிக்கிற பையனுக்கு போடற சட்டம் பத்தாம் வகுப்பு படிக்கிறவனுக்கு பொருந்தாது.
அது போல, திருக்குறள் பொதுவான அற நூலாக இருந்தாலும் அது யார், யாருக்கு பொருந்துமோ அப்படித்தான் பயன் படுத்தனும். யாருக்கு பொருந்தும்னு பார்கனும்னா, வள்ளுவப்பெருந்தகை குறள்களை வைத்துள்ள முறைமையை வைத்து பொருள் எடுக்கனும். அப்படி இல்லைன்னா, பொருளிலே முரண் வந்துடும்.”
சரி, இது நிற்க. குறள், குறள் அதற்கு வருவோம்.
“ஆற்றின் அளவறிந்து ஈக அது பொருள்
போற்றி வழங்கும் நெறி.” --- குறள் 447; அதிகாரம் – வலியறிதல்
ஆறு = வழி; அளவு = வலிமை; ஆற்றின் அளவறிந்து ஈக = பொருள் வரும் வழியையும் அதன் வலிமையையும் அறிந்து வழங்குக.
அது பொருள் போற்றி வழங்கும் நெறி = அதுவே, வந்தப் பொருளை பாதுகாத்து வழங்கும் முறை.
பொருள் வரும் வழியையும் அதன் வலிமையையும் அறிந்து வழங்குக.
அதுவே, வந்தப் பொருளை பாதுகாத்து வழங்கும் முறை.
இந்தக் குறள், ஒரு செயலைச் செய்யப்போகும் நேரத்தில், நமக்கு வந்து சேரும் உதவிகளை எப்படி பாதுகாத்து, நமது துணைகளுக்கு பகிர்ந்து அளித்து பயன் படுத்த வேண்டும் என்று சொல்கிறது.
இது நம் வாழ்வியலுக்கு ஏற்றார்போலும் பயன்படுத்தலாம்.
நன்றி. மீண்டும் சந்திப்போம்.
உங்கள் அன்பு மதிவாணன்
Comments