26/05/2023 (813)
அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:
அறிவில் மிக்கோர்கள் அவையில் நாம் முந்திக் கொண்டு சொல்லாமல் இருப்பது ‘நன்று என்றவற்றுள்ளும் நன்று’ என்றார் குறள் 715 இல்.
அப்படியல்லாமல், முந்திக் கொண்டு நம் கருத்தைச் சொல்வது, நம்மை நிலை குலைய வைக்கும் என்கிறார்.
அது இரு வகைப் படும். முதலாவதாக, அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்பது நமக்கு விளங்காமல் போகும்.அதாவது, நமக்கு அறிவு கொள்முதல் நிகழாது.
இரண்டாவது மிகவும் முக்கியமானது. அறிவில் மிக்கோர்தானே, நாம் சொல்வதைப் பொறுத்து, அதைத் திருத்திச் செல்ல மாட்டார்களா என்றால் அப்படிப் பட்டவர்கள் மிகவும் குறைவு என்பதுதான் உண்மை.
பலர், என்னதான் புதிய கருத்துகள் வந்தாலும், தாங்கள் ஆய்ந்து அறிந்த கருத்துகளை மாற்றிக் கொள்ளவே மாட்டார்கள். அது மட்டுமல்ல, எதிர் கருத்துகளைத் தங்கள் அறிவினால் அடக்கி ஒடுக்கப் பார்ப்பார்கள். அவர்களின் தற்பெருமை (ego) முன் வந்து நிற்கும். அது நம்மை நிலை குலைய வைக்கும்.
நம் பேராசான், அவையை மூன்றாக பகுக்கிறார் என்று பார்த்தோம். . அவையாவன: மிக்கார் அவை, ஒத்தார் அவை, வளர்ந்து வருவோர் அவை.
ஆங்கிலத்தில் Conferences, Seminars and Workshops என்பார்கள். இதுவும் அவைகளின் பகுப்பே.
மாநாடு (Conference) என்றால், அந்த அவையில் பேசுவதற்காக அறிவில் மிக்கோரை, நிபுணத்துவம் உள்ளவர்களை அழைத்துவந்து பேச வைப்பார்கள். அந்த அவையும் கற்றறிந்த அவையாகவே இருக்கும். பல புதிய செய்திகளை அந்த நிபுணர்கள் எடுத்து வைப்பார்கள். நம் ஐயங்களைக் கேட்டுத் தெளிவு பெற வாய்ப்புகள் அதிகம்.
அந்த அவையில் நாம் எழுந்து குறுக்கிடுவது என்பது விரும்பத்தகாதது. அது மட்டுமல்ல, நம் அறியாமையையும் அது காட்டிவிடும்.
“ஆற்றின் நிலைதளர்ந் தற்றே வியன்புலம்
ஏற்றுணர்வார் முன்னர் இழுக்கு.” --- குறள் 716; அதிகாரம் – அவையறிதல்
ஆறு = வழி; வியன்புலம் = விரிந்து பரந்த அறிவு;
வியன்புலம் ஏற்றுணர்வார் முன்னர் இழுக்கு = விரிந்து பரந்த அறிவுடையவர்களும், அந்தப் பொருள்களின் உண்மைப் பொருள்களை உணர்ந்தவர்களும் உள்ள சபையில் நம் சிற்றறிவை எடுத்து வைப்பது என்பது தவறானது; ஆற்றின் நிலை தளர்ந்தற்றே = நாம் அடைய நினைக்கும், உச்சிக்கு செல்லும், வழியில் நம்மை நிலை குலைந்தாற் போல் ஆக்கும்.
விரிந்து பரந்த அறிவுடையவர்களும், மேலும், அந்தப் பொருள்களின் உண்மைப் பொருள்களை உணர்ந்தவர்களும் உள்ள சபையில் நம் சிற்றறிவை எடுத்து வைப்பது என்பது தவறானது. அது, நாம் அடைய நினைக்கும், உச்சிக்கு செல்லும், வழியில் நம்மை நிலை குலைந்தாற் போல் ஆக்கும்.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Comments