18/06/2023 (836)
அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:
நாட்டின் இலக்கணம் கூறிய நம் பேராசான், அதனைப் பாதுகாக்கும் விதமாக ‘அரண்’ என்ற அதிகாரத்தை அமைத்துள்ளார்.
அரண் என்றால் பாதுகாப்பு, தற்காப்பு, தற்சார்பு முதலியன. பகைவர்கள் உள் நுழைந்து நம்மை, நாட்டை குழப்பிவிட முடியாத அளவிற்கு அரண் இருக்க வேண்டும். வெறும் அகழிகளும், மதில்களும் மட்டுமே அரண் ஆகாது. எப்படி கரைகளே நதியாவதில்லையோ அவ்வாறு.
சரி, அகழிகளும், மதில்களும், கரைகளும் தேவையில்லையா என்றால் மிகவும் தேவைதான். ஆனால், அது சுவரை விற்று ஓவியம் வாங்குவதுபோல் இருக்கக் கூடாது.
நம் பேராசன், அரணிற்கே எது அரண் என்று முன்பே அறிவுடைமை அதிகாரத்தில் கோடிட்டுக் காட்டியுள்ளார். காண்க 21/03/2021 (63). மீள்பார்வைக்காக:
“அறிவற்றங் காக்கும் கருவி செறுவார்க்கும் உள்ளழிக்க லாகா அரண்.” --- குறள் 421; அதிகாரம் – அறிவுடைமை
அற்றம் = அழிவு; செறுவார்க்கும் = பகைவர்கட்கும்; உள்ளழிக்கல் ஆகா= உள்ளே புகுந்து குழப்பம் பண்ணி காலி பண்ண முடியாத; அரண் = பாதுகாப்பு வளையம்.
அறிவு கருவியாகவும் (tool) அதே சமயத்திலே கேடயமாகவும் (shield) பயன் படக்கூடியது.
அந்த அறிவும் அறத்தின் வழியில் செல்ல வேண்டும். அந்த அறிவுதான் கேடயமாகவும், வாளாகவும் பயன்படும்.
அரண் அதிகாரத்தின் முதல் குறளில் யார் யார்க்கு அரண் தேவை என்பதை தெளிவாக்குகிறார்.
அதாவது வளர்ச்சியை நோக்கி செயல் ஆற்றுபவர்களுக்கும், கிடைத்தப் பொருளைப் போற்றி பாதுகாப்பவர்களுக்கும், பாதுகாப்பு என்பது அவசியம் என்கிறார்.
“ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற்
போற்று பவர்க்கும் பொருள்.” --- குறள் 741; அதிகாரம் – அரண்
ஆற்றுபவர்க்கும் அரண் பொருள் = செயல் ஆற்றுபவர்களுக்கும் அரண் என்பது பொருள் வாய்ந்தது. அதாவது, மிகச் சிறந்தது; அஞ்சித் தன் போற்றுபவர்க்கும் அரண் பொருள் = கிடைத்தச் செல்வத்தை யாராவது அழித்துவிடுவார்களோ என்று எண்ணுபவர்களுக்கும் பாதுகாப்பே சிறந்தது.
செயல் ஆற்றுபவர்களுக்கும் அரண் என்பது பொருள் வாய்ந்தது. அதாவது, சிறந்தது; கிடைத்தச் செல்வத்தை யாராவது அழித்துவிடுவார்களோ என்று எண்ணுபவர்களுக்கும் பாதுகாப்பே சிறந்தது.
மேற்கண்ட குறளுக்கு அறிஞர் பெருமக்களின் உரைகளையும் பார்க்கலாம்.
புலவர் நன்னன்: ஆற்றல் மிக்குத் தாக்குவோர்க்கும் அரண் உதவும்; ஆற்றல் அற்று தற்காத்துக் கொள்வார்க்கும் அரண் உதவும்.
புலவர் வெற்றியழகனார்: கோட்டையானது பகைவர் மீது படையெடுத்துச் செல்பவர்க்கும், படையெடுத்துச் செல்ல அஞ்சித் தன்னைப் பாதுகாத்துக் கொள்பவர்க்கும் பாதுகாப்பு அரணாக அமைவதாகும்.
பரிமேலழகப் பெருமான்: மூவகை ஆற்றலுமுடையராய்ப் பிறர்மேற் செல்வார்க்கும் அரண் சிறந்தது. அவையின்றித் தம்மேல் வருவார்க்கு அஞ்சித் தன்னையே அடைவார்க்கும் அரண் சிறந்தது.
பிறர்மேல் செல்லுங்கால் உரிமை பொருள் முதலியவற்றைப் பிறனொருவன் வெளவாமல் வைத்துச் செல்ல வேண்டுமாகலானும், அப்பெருமை தொலைந்து இறுதி வந்துழிக் கடல் நடுவண் உடைகலத்தார் போன்று ஏமங்காணாது இறுவராகலானும், ஆற்றுபவர்க்கும் போற்றுபவர்க்கும் அரண் பொருளாயிற்று. ஆற்றல் உடையாராயினும் அரண் இல்வழி அழியும் பாலராகலின், அவரை முற்கூறினார். இதனான், அரணினது சிறப்புக் கூறப்பட்டது.
இது நிற்க.
ஆக மொத்தம் எல்லாருக்கும் அரண் என்பது முக்கியம் என்பது இந்தக் குறளால் விளங்குகிறது.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Comments