18/05/2022 (446)
உட்பகைக்கு (89ஆவது அதிகாரம்) அடுத்து நம் பேராசான் சொல்வது பெரியாரைப் பிழையாமை (90ஆவது அதிகாரம்). பொருட்பாலில், அங்கவியலில் அமைந்துள்ளது இந்த அதிகாரம்.
முதல் பாடலை நாம் வெகுநாட்களுக்கு முன்பே பார்த்துள்ளோம். மீள்பார்வைக்காக 06/07/2021 (134).
“ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்
போற்றலுள் எல்லாம் தலை.” --- குறள் 891; அதிகாரம் – பெரியாரைப் பிழையாமை
நமக்கும் நம் சமுகத்திற்கும் அழிவு வரக்கூடாது என்று நினைப்பவர்கள் செய்யும் காரியங்களில் எல்லாம் முதன்மையானது, சிறப்பானது எதுவென்றால் செய்து முடிக்கும் வல்லவர்கள்களின் பெருமை, அறிவு, முயற்சிகளை புறந்தள்ளாமை, அவமதிக்காமையாகும்.
உட்பகை அதிகாரத்தில் பல குறிப்புகளைக் காட்டிய நம் பேராசான், அடுத்து சொல்வது கொஞ்சம் வாலைச் சுருட்டி வைத்தாலே போதும் என்கிறார்.
அதாவது, நம்மைவிட ஆற்றலில் அறிவில், அனுபவத்தில் பெரியவர்களை ஒரு போதும் இகழ்ந்து பேசுவதோ, நினைப்பதோ ஏதேனும் அவர்களை அவமதிக்கும் விதமாகச் செயல்களைச் செய்வதோ நல்லதில்லை என்கிறார்.
அவ்வாறு அடங்கி இருப்பது, தன் குடி வளரவேண்டும் என்று நினைத்து ஒருவர் செய்யும் செயல்களில் எல்லாம் தலையான செயல்களில் ஒன்று “பெரியாரைப் பிழையாமை” என்கிறார்.
“பெரியார்” என்பது இருவகையினரைக் குறிக்கும் என்று மனக்குடவப் பெருமான் சுட்டிக் காட்டுகிறார். அதாவது ஆற்றலால் பெரியவர்களாக இருக்கும் வேந்தர்கள், தலைவர்கள் ஒரு பிரிவினர் என்றும், மேலும் தவத்தால், ஞானத்தால் உயர்ந்து நிற்பவர்கள் அடுத்த வகையினர் என்றும் விளக்குகிறார்.
இலக்கணக் குறிப்பு: பெரியார் என்ற சொல் இரு பொருள்களைத் தருவதால் இதனை ‘இரட்டுற மொழிதல் அணி’ என்கிறார்.
அதாவது, ஒரு சொல்லோ, அல்லது சொற்றொடரோ இரு பொருள்பட வருவது ‘இரட்டுற மொழிதல் அணி’.
அதிலேயும் இரண்டு வகை இருக்காம். ஒரு சொல் பிரிபடாமல் (பெரியார்) பல பொருளைத் தருவது ‘செம்மொழிச் சிலேடை’ என்றும் சொற்றொடர் பிரிபட்டு பல பொருளைத் தருவது ‘பிரிமொழிச் சிலேடை’ என்றும் சொல்கிறார்கள்.
உதாரணம்: ‘ரூபாய் முன்னூறு தந்தேன்’ அதை திருப்பிக் கொடு என்று கேட்டால் நான் எவ்வளவு கொடுக்கனும். 300 ரூபாய் தானே? ஆனால், நான் அதை மறுத்து நீ முன் 100 தானே தந்தாய் என்று சொன்னால்? இதுதான் ‘பிரிமொழிச் சிலேடை’.
நிற்க. பெரியாரை அவமதித்தால் என்ன ஆகும் என்று அடுத்தக் குறளில் தொடர்கிறார். நாளை சந்திப்போம்.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com )
댓글