ஆற்றுவார் ஆற்றலைப் போற்றுவோம்
பசி ஆற்றும் அறம் சிறந்தது என்பதை வலியுறுத்த நினைத்த வள்ளுவப்பெருமான் அது தவம் செய்யமுயல்பவர்கள் கடைபிடிக்கும் விரதத்தை விட சிறந்தது என்றார். அப்போ, துறவு நோக்கி முயல்பவர்களை தாழ்த்துகிறாரா? என்பதுதான் கேள்வி. அவ்வாறு செய்ய வழியில்லை. இப்படி ஒரு ஐயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று நினைத்த நம் பேராசான் இரண்டு குறள்களை வைக்கிறார். ஒன்றை பெரியாரைப் பிழையாமை (90) அதிகாரத்திலும், மற்றொன்றை சான்றான்மை (99) என்கிற அதிகாரத்திலும் வைக்கிறார்.
ஒழுக்க நெறி நின்று, செய்ய நினைப்பவற்றை செய்துமுடிக்கும் ஆற்றல் கொண்டவர்களை பழிக்கும் போது அவர்கள் பாராமுகம் காட்டிச்செல்வர். (அவங்க நம்மை கண்டுக்க மாட்டாங்க) அது, நமக்கு பாதுகாப்பாக உள்ள அரண், படை, பொருள், நட்பு முதலியவற்றை வலுவிழக்கச் செய்யும். ஆகையால் அவர்களை அவமதியாமை (மதிப்பது) நாம் செய்யக்கூடிய பாதுகாப்புகளுள் மிகச்சிறந்த பாதுகாப்பு என்கிறார் நம் பேராசான்.
“ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்
போற்றலுள் எல்லாம் தலை.” --- குறள் 891; அதிகாரம் – பெரியாரைப் பிழையாமை
ஆற்றுவார் = செய்து முடிக்கும் வல்லவர்கள்; ஆற்றல்(ஐ) = பெருமை, அறிவு, முயற்சிகளை; இகழாமை = புறந்தள்ளாமை, அவமதிக்காமை; போற்றுவார் = நமக்கும் நம் சமுகத்திற்கும் அழிவு வரக்கூடாது என்று நினைப்பவர்கள்; போற்றலுள் எல்லாம் = செய்யும் காரியங்களில் எல்லாம்; தலை = முதன்மையானது, சிறப்பானது
மேலும், நாம் செய்யவேண்டியது, அத்தகைய பெரியவர்களை பணிந்து அவர்கள் வழி நடத்தல் ஆகும். அதுவே,நம் எதிரிகளை தகர்க்கும் படையாக செயல்பட்டு நம்மைக் காக்கும்.
“ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்
மாற்றாரை மாற்றும் படை.” --- குறள் 985; அதிகாரம் - சான்றான்மை
ஆற்றுவார் ஆற்றல்(ஐ) = செய்து முடிக்கும் வல்லமை உடையவர்களின் ஆற்றலை; பணிதல்= பணிந்து போற்றி ஏற்றுக் கொள்ளுதல்; அதுசான்றோர் (களுக்கு) = உயர நினைப்பவர்களுக்கு; மாற்றாரை = எதிரிகளை; மாற்றும் = நண்பனாக மாற்றும் அல்லது அழிக்கும்; படை = கருவியும் ஆகும். (கருவியும் – முற்றும்மை; எல்லாமுமாகி கருவியுமாகும்)
ஆற்றுவார் ஆற்றலைப் போற்றுவோம்.
மீண்டும்சந்திப்போம். நன்றிகளுடன். உங்கள் அன்பு மதிவாணன்.
Comments