18/07/2022 (507)
வேதியர், “நின் புண்ணியம் அனைத்தும் உதவுக” என்று கேட்க, அதைக் கேட்ட கர்ணன் உளம் மகிழ்ந்தான்.
அந்தணா, எனது உயிரோ நிலை கலங்கி நிற்கிறது! அது எனது உடலின் உள்ளே இருக்கிறதா, அல்லது வெளியே இருக்கிறதா என்றே தெரியவில்லை.
பாவி நான் வேண்டும் பொருள் அனைத்தும் கொடுக்கும் நிலையில் இருந்தபோது நீர் வரவில்லை.
புண்ணியத்தைக் கொடு என்று கேட்கிறீர். உமக்கு ‘செய்புண்ணியம்’ அனைத்தும் கொடுக்கிறேன் எடுத்துக் கொள்ளுங்கள். இருப்பதைக் கேட்டீரே! பூவில் வாழும் பிரம்மாகூட உனக்கு நிகரில்லை என்றால் அந்த புண்ணியம் இதனினும் பெரிதோ? என்றான்.
“ஆவியோ நிலையின் கலங்கியது; யாக்கை அகத்ததோ? புறத்ததோ? அறியேன்; பாவியேன் வேண்டும் பொருள் எலாம் நயக்கும் பக்குவம்தன்னில் வந்திலையால்; ஓவு இலாது யான் செய் புண்ணியம் அனைத்தும் உதவினேன்; கொள்க நீ! உனக்குப் பூவில் வாழ் அயனும் நிகர் அலன் என்றால், புண்ணியம் இதனினும் பெரிதோ?” --- பாடல் 240, பதினேழாம் போரச்சருக்கம், வில்லி பாரதம்.
ஓவுஇலாது = எதுவும் மிச்சம் இல்லாது, எனக்குன்னு எதுவும் வேண்டாம்.
அந்தணர் கேட்டது “புண்ணியம்”. கர்ணன் தருகிறேன் என்று சொன்னது “செய் புண்ணியம்”. அவ்வாறு சொன்னதிலேயே கர்ணன் வானளாவ உயர்ந்து நிற்கிறான்.
என்ன வித்தியாசம். தமிழில் “செய்புண்ணியம்” என்பது வினைத்தொகை. அது என்ன “வினைத்தொகை”? நாம் படித்திருப்போம்: காலம் கடந்த பெயரெச்சம் வினைத்தொகை.
நம்மாளு: படிச்சோம் பள்ளியிலே. அவ்வளவுதான்! அதுக்கு அப்புறம் மறந்தும் போயிட்டோம். உங்க விளக்கம் இன்னும் புரியலை.
ஆசிரியர்: உதாரணம் சொன்னால் புரியும். ஊறுகாய்…
நம்மாளு: புரிஞ்சுடுச்சு ஐயா. ஊறுகாய் என்றால் ஊறியகாய், ஊறுகின்ற காய், ஊறும் காய். மூன்று காலத்துக்கும் பொருந்துவதால் இது காலம் கடந்த பெயரெச்சம்.
செய்புன்ணியம் அனைத்தும் தருகிறேன் என்று கர்ணன் சொன்னவிதத்தில் குறிப்பது ‘செய்த புண்ணியம், செய்கின்ற புண்ணியம், செய்யும் புன்ணியம்’. அதுவும் ‘ஓவுஇலாது’ என்றான். கொஞ்சம் கூட மிச்சமில்லாது எடுத்துக்கொள் என்றான்.
கண்ணபரமாத்மா உளம் மகிழ்ந்தார், மனம் நெகிழ்ந்தார்.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)
Comments