16/04/2022 (414)
வெகுளாமை, அதாவது சினம் கொள்ளாமை, எனும் அதிகாரத்தை இதுகாறும் பார்த்தோம். சினத்தீ நெஞ்சில் மூள சிறு நெருப்பு போதும். சிறிதளவு மனம் மாறுபட்டால் வெறுப்புணர்வு தோன்றும். இந்த வெறுப்புணர்ச்சியால் கருத்து மாறுபாடு தோன்றும். கருத்து மாறுபாடுகளால் மனம் தனல் போலக் கொதிக்கும். இதுவே பகைத்தீயாய் பெருகும்.
சரி இதற்கு ஒரு சொல் இருக்கிறதா என்றால், இருக்கிறது. ஒரு அதிகாரம் முழுவதிலும் அச் சொல்லைப் பயன்படுத்தியும் அவ்வதிகாரத்தின் தலைப்பாகவும் வைத்துள்ளார் நம் பேராசான்.
அச்சொல்தான் ‘இகல்’. 86ஆவது அதிகாரம்.
இகல் என்பது மாறுபாட்டினைக் குறிக்கும். இது ஒரு பண்பின்மை என்று குறிக்கிறார். அதாவது இதை ஒரு பண்பாகவே எடுத்துக்க கூடாதாம். அது மட்டுமில்லாமல், இது எல்லாவித தீய பண்புகளையும் வளர்க்கும் ஒரு நோய் என்கிறார் நம் பேராசான்.
பகல் என்றால் என்ன பொருள்? இது கூட தெரியாதா? இரவுக்கு எதிர் பகல். காலை முதல் மாலை வரை. இது வழக்கமானப் பொருள்.
பகல் என்ற சொல்லுக்குப் பல பொருள் இருக்காம். அவற்றுள் சில: நடு, நடுவு நிலைமை, கூடாமை, நுகத்தாணி, முகூர்த்தம், சூரியன், வெளி, கமுக்கட்டு (அதாங்க அக்குள்ன்னு சொல்றோமே அது)
அதிலே ஒரு பொருள் பகுத்தல். அதாவது பிரித்தல். பகல் என்னும் பண்பின்மையை இகல் செய்யுமாம்.
“இகலென்ப எல்லா உயிர்க்கும் பகல் என்னும்
பண்பின்மை பாரிக்கும் நோய்.” --- குறள் 851; அதிகாரம் – இகல்
எல்லா உயிர்களுக்கும் பிற உயிர்களோடு இயைந்து வாழாமை என்னும் கெட்ட குணத்தை பரப்பும் நோயை ‘இகல்’ என்று சொல்வார்கள் அறிஞர்கள்.
பாரிக்கும் = பரப்பும்; பகல் = பகுத்தல், கூடாமை; எல்லா உயிர்க்கும் பகல் என்னும் பண்பின்மை பாரிக்கும் நோய் = எல்லா உயிர்களுக்கும் பிற உயிர்களோடு கூடாமை என்னும் கெட்ட குணத்தை பரப்பும் நோய்; இகலென்ப = இகல் என்று சொல்வார்கள் அறிஞர்கள்.
இகலினால் வரும் குற்றத்தை இந்தக் குறளில் நம் வள்ளுவப் பெருந்தகை எடுத்துச் சொல்கிறார்.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)
Comments