23/04/2022 (421)
இகல் எதிரே வந்தால் கொஞ்சம் சாய்ந்து கடந்துவிட்டால் நம்மை கவிழ்க்க யாராலும் இயலாது என்று நம் பேராசான் சொன்னதை, குறள் 855ல் பார்த்தோம். காண்க 20/04/2022 (418).
மீள்பார்வைக்காக:
“இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே
மிகலூக்கும் தன்மை யவர்.” --- குறள் 855; அதிகாரம் – இகல்
அந்தக் கருத்தையே மீண்டும் வலியுறுத்தும் விதமாக மேலும் ஒரு குறள் அமைத்துள்ளார்.
‘ஆக்கம்’ அதாவது ‘ஆகிற வழி’ எது என்று கேட்டால் இகலிற்கு எதிர்சாய்தல் என்கிறார். எதிர்சாய்தல் என்றால் அதற்கு எதிர் வினை ஆற்றாமல், தவிர்த்து நடப்பது.
அதைச் செய்யாமல் இகலை வளர்க்கும் விதமாக எதிர்வினையாற்றினால் கேடுதான் விளையும் என்கிறார்.
“இகலிற்கு எதிர்சாய்தல் ஆக்கம் அதனை
மிகலூக்கின் ஊக்குமாம் கேடு.” --- குறள் 858; அதிகாரம் – இகல்
இகலிற்கு எதிர்சாய்தல் ஆக்கம் = இகல் எனும் மாறுபாடு தோன்றுமாயின் அதற்கு எதிர் வினையாற்றாமல் ஒதுங்கிவிடுவது ஆக்கம் தரும்; அதனை
மிகலூக்கின் ஊக்குமாம் கேடு = அதைச் செய்யாது, அதனை மேலும் வளர்க்கும் விதமாக செயல்பட்டால் அது கேட்டினையே கொண்டுவந்து சேர்க்கும்.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)
Comentarios