03/04/2022 (401)
நாம ரொம்ப நாளைக்கு முன்னாடி ஒரு குறளைப் பார்த்திருக்கோம் பெரியாரைத் துணைக்கோடல் அதிகாரத்திலிருந்து.
மீள்பார்வைக்காக:
ஒருத்தன் கெட்டுப்போவதற்கு இரண்டு காரணிகள் தான். ஒன்று, தனக்குத்தானே சூனியம் வைச்சுக்கறது, இன்னொன்று, பகைவர்கள் வைச்சுவிடறது. நல்ல தமிழில் சொன்னால்: அகக்காரணிகள், புறக்காரணிகள்.
அது எப்படிங்க நமக்கு நாமே கெடுதல் பண்ணிப்போமா?ன்னு கேட்கலாம். அது தான் உண்மை. பெரும்பாலும் நமக்கு வரும் துன்பங்கள் நமக்கு நாமே வைத்துகொள்ளும் சூனியங்கள் தான். அதிலே ரொம்ப முக்கியமானது பெரியோரின் அறிவுரைகளை காது கொடுத்து கேட்காதது.
யோசிச்சு பார்க்கலாம்! நம்ம வாழ்க்கையை திரும்பிப் பார்த்தால் – திரும்பி எங்கே பார்க்கறது? நினைப்பதற்கே பயமா இருக்கே. புறந்தள்ளியவை ஏராளமாக இருக்கும். நமக்கு நாமே வெட்டிக்கொண்ட குழிகள் வழியெங்கும் இருக்கும். பகைவர்கள் இல்லாமலே விழுந்து வைத்திருப்போம். சரி விடுங்க. இனிமேலாவது கொஞ்சம் கவனம் வைப்போம்.
இதோ அந்தக் குறள்:
“இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பார் இலானும் கெடும். “ --- குறள் 448; அதிகாரம் - பெரியாரைத் துணைக்கோடல்
இடிப்பாரை = நம்மை இடித்து நல்வழி காட்டுபவர்கள்; இல்லாத = இல்லாதவன்; ஏமம் = பாதுகாப்பு; ஏமரா = பாதுகாப்பு இல்லாத; மன்னன் = தலைவன் - நாம தான்; கெடுப்பார் = பகைவர்கள்; இலானும் = இல்லை என்றாலும்; கெடும் = அழிவார்கள்.
இடிப்பார்கள் துணையாக இல்லாவிட்டால் கெடுப்பதற்கு ஆளே தேவையில்லை.
இடிப்பவர்களைத் துணையாக கொண்டுவிட்டால் கெடுப்பதற்கு எவராலும் முடியாது. இதைத்தான் இப்படிச் சொல்கிறார்:
“இடிக்கும் துணையாரை ஆள்வாரை யாரே
கெடுக்கும் தகைமை யவர்.” --- குறள் 447; அதிகாரம் – பெரியாரைத் துணைக்கோடல்
வேற பாதையிலே (ரூட்டிலே) போகும்போது தடுத்து நம்மை வழிப்படுத்தும் பெரியவர்களைத் துணையாகக் கொண்டு ஆள்பவர்களைக் கெடுக்கும் திறமையுடையவர்கள் யார்?
இடிக்கும் துணையாரை ஆள்வாரை =நாம வேற பாதையிலே (ரூட்டிலே) போகும்போது தடுத்து நம்மை வழிப்படுத்தும் பெரியவர்களைத் துணையாக க் கொண்டு ஆள்பவர்களைக்; கெடுக்கும் தகைமை யவர் யார் = கெடுக்கும் திறமையுடையவர்கள் யார்?
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)
Comments