03/06/2024 (1185)
அன்பிற்கினியவர்களுக்கு:
ஓங்கி அகன்ற ஆல மரம்; அதன் அடி மரத்தில் செல் அரிப்பு; மரம் அடியோடு சாய்ந்திருக்க வேண்டும்; ஆனால் அது இன்னும் திறமாக நிற்கின்றது! காரணம், அதனில் இருந்து விழுந்த விழுதுகள் அந்த ஆலமரத்தினை விழாமல் பாதுகாக்கின்றன.
இந்தக் கருத்தினை நாலடியாரில் காட்சிப்படுத்தியுள்ளார் அதன் ஆசிரியர். எதற்காக? அந்தப் பாடலைப் பார்ப்போம்.
சிதலை தினப்பட்ட ஆல மரத்தை
மதலையாய் மற்றதன் வீழூன்றி யாங்குக்
குதலைமை தந்தைகட் டோன்றிற்றான் பெற்ற
புதல்வன் மறைப்பக் கெடும். – பாடல் 197; நாலடியார்
சிதலை = செல்; தினப்பட்ட = தின்னப்பட்ட; ஆல மரத்தை = ஆல மரத்தை;
மதலையாய் = தாங்கி நிற்கும் வகையில்; மற்று அதன் வீழ் ஊன்றி ஆங்கு = அதனின்று விழுந்த விழுதுகள் தரையில் ஊன்றி நின்று காப்பதனைப் போல; குதலைமை = தளர்ச்சி; தந்தைகண் தோன்றிற்றான் பெற்ற
புதல்வன் மறைப்பக் கெடும் = தந்தையிடம் தோன்றினால் அவன் பெற்ற புதல்வன் தாங்கி நிற்க அவன் தளர்ச்சி காணாமல் போகும்.
செல்லால் தின்னப்பட்ட ஆல மரத்தைத் தாங்கி நிற்கும் வகையில் அதனின்று விழுந்த விழுதுகள் தரையில் ஊன்றி நின்று காப்பதனைப் போலத் தளர்ச்சி தந்தையிடம் தோன்றினால் அவன் பெற்ற புதல்வன் தாங்கி நிற்க அவன் தளர்ச்சி காணாமல் போகும்.
சரி, இந்த நாலடியார் ஏன் இங்கே என்று கேட்கிறீர்கள்? குடி செயல் வகைக்கு முடிவுரையில் முத்தாய்ப்பாக ஒரு கருத்தைச் சொல்கிறார் நம் பேராசான்.
அஃதாவது, குடியைத் தாங்கி நிற்கும் கூட்டத்தினர் விழுதுகள் போலத் தோன்றிடல் வேண்டும் என்கிறார். எப்படித் தந்தை தளர்ந்தால் மகன் அந்தக் குடும்பத்தைத் தாங்கிப் பிடிக்க வேண்டுமோ அது போல என்கிறார்.
செல்லரிப்புப் போலத் துண்பங்கள் குடியைத் தாக்கும். அப்பொழுது அதனைத் தாங்கிப் பிடிக்க ஆள் இல்லையென்றால் குடி தாழும்.
இடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்தூன்றும்
நல்லாள் இலாத குடி. – 1030; - குடி செயல் வகை
அடுத்தூன்றும் நல்லாள் இலாத குடி = குடியைத் தாங்கி நிற்க வல்லவர்கள் புதிது புதிதாக விழுதுகள் போலத் தோன்றி விழுந்து தாங்கிப் பிடிக்காவிட்டால்; இடுக்கண்கால் கொன்றிட வீழும் = துன்பங்கள் என்னும் கோடாரி அடி மரத்தை வெட்டிச் சாய்க்கும்பொழுது எப்படி அந்த மரம் சாயுமோ அது போல அந்தக் குடி வீழும்.
குடியைத் தாங்கி நிற்க வல்லவர்கள் புதிது புதிதாக விழுதுகள் போலத் தோன்றி, விழுந்து, தாங்கிப் பிடிக்காவிட்டால், துன்பங்கள் என்னும் கோடாரி அடி மரத்தை வெட்டிச் சாய்க்கும்பொழுது எப்படி அந்த மரம் சாயுமோ அது போல அந்தக் குடி வீழும்.
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Commentaires