06/06/2024 (1188)
அன்பிற்கினியவர்களுக்கு:
நலமுடன் இருந்தாலும், பசி வந்திடப் பத்தும் பறந்து போம்.
இன்மை இடும்பை. அதனை இரந்து தீர்வாம் என்பது கொடுமையிலும் கொடுமை என்றார் குறள் 1063 இல்.
சிலர் தங்களுக்கு ஏற்படும் துன்பங்களை மௌனமாகவே கடந்து செல்வர். இரப்பது இழிவு என்ற கொள்கையைக் கொண்டவர்களாக இருப்பர். அவர்களை இந்த உலகம் கண்டறிந்து உதவில்லை என்றால் தங்கள் உயிரையும் மாய்த்துக் கொள்ளத் தயங்க மாட்டார்கள். அவர்களுக்கு இந்த உலகம் ஒரு பொருட்டில்லை! It doesn’t matter!
இடமெல்லாம் கொள்ளாத் தகைத்தே இடம் இல்லாக்
காலும் இரவொல்லாச் சால்பு. – 1064; - இரவு அச்சம்
இடம் இல்லாக் காலும் இரவு ஒல்லாச் சால்பு = வாழ வழி இல்லாத பொழுதும் சிலர் இரப்பது இயலாது என்று இருக்கும் உயரிய குணத்திற்கு;
இடமெல்லாம் கொள்ளாத் தகைத்தே = இந்த உலகம் ஈடாகாது.
வாழ வழி இல்லாத பொழுதும் சிலர் இரப்பது இயலாது என்று இருக்கும் உயரிய குணத்திற்கு இந்த உலகம் ஈடாகாது.
இந்த இரவு அச்சம் என்னும் அதிகாரத்தினை ஒரு பெரும் உணர்வு நிலையில் பாடியுள்ளார் நம் பேராசான் என்று எண்ணுகிறேன். ஒவ்வொரு குறளும் மனத்தைப் பிசைகிறது.
ஐயன் நேரடியாகச் செய்க பொருளை என்று ஆணையிடும் குறளினைப் பார்த்துள்ளோம். ஆனால், கீழே இறங்கிக் கெஞ்சிக் கேட்கும் குறளும் இந்த அதிகாரத்தில் உண்டு. உலகத்தின் அவல நிலையையும், எதனையும் கண்டும் காணாமலும் செல்லும் மனித அவசரங்களும் அவரைப் பாதித்துள்ளன எனலாம்.
இதுவரைப் பார்த்த பாடல்களின் தொகுப்பாக:
அள்ளிக் கொடுப்பவர்களிடமும் கை ஏந்தாமல் இருப்பது சிறப்பு என்று முதல் குறளில் ஆரம்பித்த நம் பேராசான், அடுத்த குறளில் இரந்துதான் ஒருவர் உயிர் வாழ வேண்டும் என்றால் இந்த உலகத்தை இயற்றியவன் அழியட்டுமே என்று கடிந்தார் குறள் 1062 இல்.
அதனைத் தொடர்ந்து, வாழ வழியில்லையே என்று இருப்பவர்கள் இரந்துதான் ஆக வேண்டும் என்ற நிலை கொடுமையிலும் கொடுமை என்றார் குறள் 1063 இல்.
மேலும், அது போன்றதொரு நிலைக்குச் சென்றாலும் இரக்காமல் இருப்பவர்க்கு உதவாவிடின், இந்த உலகம் ஒரு பொருட்டில்லை என்று இந்த உலகத்தின் தலையில் ஒரு கொட்டு கொட்டினார் குறள் 1064 இல்.
அடுத்து வரும் குறள்தான் சிறப்பு. உனக்கு வாழ வழியில்லை என்பதனால் உன் சார்பாக இந்த உலகத்தைப் படைத்தவனையும், இந்த உலகத்தையும் வெளுத்துவிட்டேன். உனக்கு இந்த உலகம் ஈடாகாது என்று உன் சிறப்பினையும் சொல்லியுள்ளேன்.
ஆனால், உனக்கு ஒன்று சொல்வேன். நன்றாகக் கவனமாகக் காதைக் கொடுத்துக் கேள். “எனக்குப் பசியினால் காது அடைத்திருக்கிறதே நான் எப்படிக் கேட்பேன்?” என்று சொல்லாதே. உனது உறுதியைப் பாராட்டுகிறேன். உயிர் முக்கியம். அதனை விட்டுவிட முயலாதே.
காலம் ஒரு நாள் மாறும். உன் கவலைகள் யாவும் தீரும். உன் முயற்சியால் கிடைப்பது எத்துனைத் துளியாக இருந்தாலும் அதனைக் கொண்டு ஒரு கஞ்சி காய்த்துக் குடி. என்ன வெறும் தண்ணிராக இருக்கிறதா? பரவாயில்லை. இந்த இரக்கமற்ற உலகில் அந்த வெறும் தண்ணீர் போன்ற கூழும் இனியதே. வாழ்ந்து காட்டு.
தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்த
துண்ணலின் ஊங்கினிய தில். – 1065; - இரவு அச்சம்
புற்கை = கஞ்சி, கூழ்; தெண்ணீர் = வெறும் தண்ணீர், தெளிந்த நீர்; அடு = சமைத்த; ஊங்கு = மேற்பட்டது, மேலானது;
தாள் தந்தது அடு புற்கை தெண்ணீர் ஆயினும் = உன் முயற்சியால் உருவாக்கிய கஞ்சி தெளிந்த நீரைப் போல இருந்தாலும்; உண்ணலின் ஊங்கு இனியது இல் = அதனை உண்பதைக் காட்டிலும் மேலான இனிய பொருள் இல்லை.
உன் முயற்சியால் உருவாக்கிய கஞ்சி தெளிந்த நீரைப் போல இருந்தாலும், அதனை உண்பதைக் காட்டிலும் மேலான இனிய பொருள் இல்லை.
நாளைத் தொடர்வோம். நன்றியுடன், உங்கள் மதிவாணன்.
Commentaires