12/03/2022 (379)
“கொஞ்சம் ஊடல்; அதன் பின் கூடல் இதுதானே இனிமையாக இருக்கும். நான் என்ன ஒரே வழி சண்டை போடறதுன்னா சொல்றேன். கொஞ்சம் பிகு பண்ணிட்டு அவர் பின்னாலே போகலாம்ன்னு சொல்றேன். அவ்வளவுதானே?
நீ என்னாடான்னா அவர் பக்கமே எப்பவும் இருக்கிறாய். உன்கூட யார் இருப்பாங்க? “ ன்னு ‘அவள்’ நெஞ்சிடம் ஊடல் கொள்கிறாள்.
“இனி அன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே
துனிசெய்து துவ்வாய் காண் மற்று.” --- குறள் 1294; அதிகாரம் - நெஞ்சோடு புலத்தல்
துனி = பகைத்து; துவ்வாய் = சேருவாய், நுகருவாய், அனுபவிப்பாய்;
நெஞ்சே துனி செய்து மற்றுத் துவ்வாய் = எனதருமை நெஞ்சே, கொஞ்சம் ஊடி பிறகு சேரலாம் என்றால் கேட்கமாட்டாய்; இனி அன்ன நின்னொடு சூழ்வார்யார் =ஆகையால், உன்னோட எனது ‘அது’ போன்ற எண்ணங்களை யார் பேசுவார்?
ஒருத்தரைப் பிடித்துவிட்டால் அவ்வளவுதான் ஒரே அடியா இந்த மனசு அந்தப் பக்கம் தாவும். கொஞ்சம் தப்பா போயிட்டா உடனே கீழப் போட்டு உடைக்கும். கொஞ்சம் நிதானமாக இருக்கத் தெரியாது.
அது சரி, அப்படி இருந்தால்தானே மனசு. ஜோக் அடிச்சா சிரிக்கனும். போயிட்டு வாங்க அப்புறம் யோசனை பண்ணி சிரிக்கறேன் என்றால் நல்லவா இருக்கும்.
சில சமயம் நம்ம மனசு சொன்னது தப்பாகக் கூட போகலாம். அதற்காக, இல்லை, இல்லை நான் என் அறிவைத்தான் பயன் படுத்துவேன் என்றால் அதிலேயும் தப்புவராதா என்ன?
உறவுகளிடம் உரிமை இருப்பதாலேதானே நாம நினைத்ததைச் சொல்கிறோம், செய்கிறோம். சம்பந்தம் இல்லாதவர்களிடம் நாம் சண்டை போடுவதில்லையே!
உறவுகளிடம், அறிவைவிட மனசுதான் சிறப்புன்னு சொல்கிறார் நம்ம பேராசான் இந்த இன்பத்துப்பாலில் என்று நினைக்கிறேன்.
அறிவுக்கு எல்லை உண்டு. மனசுக்கு இரண்டே இரண்டுதான்: பிடித்தது, பிடிக்காதது.
உடனே, சிலர், அப்போ எனக்கு பிடித்தது எல்லாம் செய்யலாமான்னு கேட்பாங்க. தாராளமாக. ஆனால், அது தங்களையோ, மற்றவர்களையோ பாதிக்காமல் இருக்கனும் அவ்வளவுதான். நிம்மதியான சக-வாழ்வுதான் (Peaceful co-existence) ஒவ்வொரு படைப்பின் இலட்சியம்.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)
Σχόλια