15/02/2024 (1076)
அன்பிற்கினியவர்களுக்கு:
இருவரும் தனித்தும் சுகித்தும் இருந்தார்களாம். காலையில் அதனைவிட மிக அன்பாக அவளின் முடியைக் கோதி, ஆடையைச் சரி செய்து, இதழில் முத்தமிட்டு இப்போது செல் என்றானாம்.
இதை அவள் தோழியிடம் சொல்கிறாள். இந்த ஆள் செய்ததையெல்லாம் பார்க்கும்பொது இன்றைக்கு மீண்டும் கிளம்பிப் போயிடும்போல இருக்கு. நீ என்ன நினைக்கிறாய்?
இந்தக் கற்பனை பாலைக்கலியில் பெருங்கடுங்கோவினுடையது. பெரிய பாடல். அதில் ஒரு பகுதி:
… முள் உறழ் முளை எயிற்று அமிழ்து ஊறும் தீ நீரைக்
கள்ளினும் மகிழ் செயும் என உரைத்தும் அமையார், என்
ஒள்ளிழை திருத்துவர் காதலர்; மற்று அவர்
உள்ளுவது எவன் கொல்? அறியேன்!” …
பற்களுக்கு இடையில் ஊறும் உமிழ் நீரை அமிழ்து என்றும் கள்ளினும் போதை தருவது என்றும் சொல்லிப் புகழோ புகழ் என்று புகழ்ந்தும் அவர் அடங்கவில்லை. அதன்பின், என் ஆடை அணிகலன்களை நேர்த்தியாக்கப் பெரும்பாடுபட்டார். என்ன இன்றைக்கு இவ்வளவு அன்பு என்று எனக்குத் தெரியவில்லை என்கிறாள்.
அவர் செய்தனவெல்லாம் இன்பம் பயத்தன. ஆனால், இது பிரிவைச் சுட்டி துன்பத்தைத் தரப்போகிறதோ என்று அச்சமாகவும் இருக்கிறது.
அவன் இன்று கிளம்ப முடிவு செய்துவிட்டான் என்பது தோழிக்குப் புரிந்துவிட்டது.
இவற்றையெல்லாம், அத் தோழி அவனுக்குச் சொல்லி நீ இங்கு இருக்க வேண்டும் என்று அவனை இடிப்பதுபோல அந்தப் பாடல் அமைந்துள்ளது.
சரி, நாம் குறளுக்கு வருவோம்.
இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும்
புன்கண் உடைத்தால் புணர்வு. - 1152; - பிரிவு ஆற்றாமை
பார்வல் = செயலும் பார்வையும்; அவர் பார்வல் இன்கண் உடைத்து = அவரின் செயலும் பார்வையும் இன்பத்தைத் தருகின்றன; புணர்வு பிரிவு அஞ்சும் புன்கண் உடைத்து = அந்த அளவிற்கு மீறிய அன்பு இனி சேர்ந்திருக்க முடியாத பிரிவினையை உண்டாக்கும் துன்பத்தைத் தருமோ?
அவரின் செயலும் பார்வையும் இன்பத்தைத் தருகின்றன. அந்த அளவிற்கு மீறிய அன்பு இனி சேர்ந்திருக்க முடியாத பிரிவினையை உண்டாக்கும் துன்பத்தைத் தருமோ?
பின்புலத்தில் ஒரு திரை இசைப்பாடல்:
… அமுத கானம் நீ தரும் நேரம் நதிகள் ஜதிகள் பாடுமே
விலகிப் போனால் எனது சலங்கை விதவை ஆகிப் போகுமே …
…
… இசையை அருந்தும் சாதகப் பறவை போல நானும் வாழ்கிறேன்
உறக்கமில்லை எனினும் கண்ணில் கனவு சுமந்து போகிறேன்
தேவதை பாதையில் பூவின் ஊர்வலம்,
நீ அதில் போவதால் ஏதோ ஞாபகம்
வென்னீரில் நீராடும் கமலம், விலகாது விரகம் …
நாதம் என் ஜீவனே வா வா என் தேவனே
உந்தன் ராஜ ராகம் பாடும் நேரம்
பாறை பாலூறுதே ஓ … பூவும் ஆளானதே … கவிப்பேரரசு வைரமுத்து, காதல் ஓவியம், 1982
அப்படியே இளையராஜாவின் இசையில் மயங்கி குறளை மறந்துடப் போறீங்க! குறள், குறள் அதுதான் முக்கியம்.
மேலும் பேசுவோம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
பி.கு.: ஒரு நாளைக்கு இரண்டு மூன்று குறள்களைப் பார்த்துவிடலாம் என நினைத்தேன். எங்கே முடிப்பது? கற்பனை பறக்குது!
சுருக்கலாமான்னு சொல்லுங்க, சுருக்கிடலாம்.
Comments