21/09/2023 (929)
அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:
இன்சொலில் ஈரம் இருக்க வேண்டும்; வஞ்சனை இருக்கக் கூடாது; உண்மை இருக்க வேண்டும் இதுதான் அடிப்படை என்றார் குறள் 91 இல்.
அந்த இன்சொல்லும் முகம் மலர்ந்து இருக்க வேண்டும். அஃது ஒருவற்கு நேரடியாகச் செய்யும் உதவியைவிட நல்லது என்றார் குறள் 92 இல்.
சரி, முகம் மலர்வது எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அகமும் மலர்ந்து அம் மலர்ச்சி முகத்தில் தெரிய இன்சொல் வெளிப்பட வேண்டும் என்றார் குறள் 93 இல்.
எல்லாரிடமும் இன்சொல்களைப் பரிமாறிக் கொண்டால் துன்பம்தரும் வறுமை அவர்களிடம் நெருங்காது என்றார் குறள் 94 இல்.
இன்சொல்லுடன் பணிவும் இருப்பது ஒருவற்கு அழகு என்றார் குறள் 95 இல்.
நல்லவை நாடி இனிய சொல்லும் போது அல்லவை நம்மை நெருங்காது. அதனால் அறம் பெருகும் என்றார் குறள் 96 இல்.
பயனைத் தரும் இனிய சொல்கள் இனிமையையும் நன்மையையும் ஒருசேர அளிக்கும் என்று மீண்டும் வலியுறுத்தினார் குறள் 97 இல்.
இன்சொல் என்பது ஏதோ வாயினால் மட்டும் நிகழ்வதில்லை. முகத்தாலும் அகத்தாலும் வெளிப்படும். எழுத்து, செய்கைகள் முதலியனவும் அதனுள் அடங்கும். ஆகையினால் அனைத்திலுமே இனிமை பரவி இருத்தல் வேண்டும்.
மேலும் சொல்கிறார். “உங்களுக்கு ஐயமே வேண்டாம். சிறுமை இல்லாத இன்சொல் நீங்கள் வாழும் போதும், காற்றினில் கரைந்த போதும் இன்பமே தரும்” என்கிறார்.
அது எப்போது நிகழும் என்றால் நமது இன்சொல்லில் சிறுமையைத் தவிர் என்கிறார். சிறுமை என்பது மற்றவர்களைச் சிறுமைபடுத்தல்; துன்புறுத்தல்; கீழான நோக்கத்திற்கு இட்டுச் செல்லல் முதலான.
“சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும்.” --- குறள் 98; அதிகாரம் – இனியவைகூறல்
சிறுமையுள் நீங்கிய இன்சொல் = சிறுமை தருவனவற்றைத் தவிர்த்த இன்சொல்; மறுமையும் இம்மையும் இன்பம் தரும் = (நாம்) இல்லாவிடினும் இருப்பினும் இன்பம் தரும்.
சிறுமை தருவனவற்றைத் தவிர்த்த இன்சொல் நாம் இல்லாவிடினும் இருப்பினும் இன்பம் தரும்.
இன்சொல்லானது இவ்வளவு நன்மையைப் பயக்கும்போது யாராவது வன்சொல்லைப் பயன்படுத்துவார்களா என்றும் கேட்கிறார் நம் பேராசான்.
“இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது.” --- குறள் 99; அதிகாரம் – இனியவைகூறல்
இன்சொல் இனிது ஈன்றல் காண்பான் = இன்சொல்லானது இத்துணை இன்பங்களை வழங்குவதைக் காண்பவன்; வன்சொல் வழங்குவது எவன்கொல் = பிறரிடம் வன்சொல் பேசுவது எதனால்?
இன்சொல்லானது இத்துணை இன்பங்களை வழங்குவதைக் காண்பவன் பிறரிடம் வன்சொல் பேசுவது எதனால்? எனக்கு ஆச்சரியமாக உளது என்கிறார் நம் பேராசான்.
இது எப்படி இருக்கிறது என்றால்: நன்றாகக் கனிந்தப் பழம் இருக்கிறது; அப்படியே கடித்துச் சுவைக்கக் கூடிய பழம்தான் அது; அதற்கு எந்த விதமான கருவிகளும் தேவையில்லை; அப்படி இருந்தும் கனியாதக் காயைத்தான் கடிப்பேன்; அதனைத்தான் நாள்தோறும் உண்ண முயல்வேன் என்றால் என்ன செய்ய என்று கேட்கிறார்.
“இனிய உளவாக இன்னாத கூறல் கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.” --- குறள் 100; அதிகாரம் – இனியவைகூறல்
(இன்னாத = இனியவை அல்லாத)
மேற்கண்டக் குறளை நாம் ஒரு தொகையாக, அஃதாவது, குறள்கள் 100, 200, 300, 291, 645 என்று இணைத்துச் சுவைத்துள்ளோம். காண்க 26/01/2021 (9).
சொல்லிலும் செயலிலும் இனிமை பரவட்டும்!
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன் உங்கள் அன்பு மதிவாணன்.
Comments