14/09/2023 (922)
அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:
உதவி வரைத்தன்று உதவி என்று குறள் 105 இல் சொன்ன நம் பேராசான் விருந்தோம்பலில் விருந்தின் பயன் இனைத்துணைத்து அஃதாவது இவ்வளவுதான் என்று சொல்லவும் முடியாது என்கிறார்.
அதுவும் சரிதானே, பசித்தவனுக்குத் தான் தெரியும் கைப்பிடிச் சோற்றின் அருமை.
பசித்தவனுக்கோ கைபிடிச்சோறு உயிர்நாடி!
செரிக்காமல் இருப்பவனுக்குப் பாயாசமும் பயமுறுத்தும்!
தீயிட்டு வேள்வி, யாகம் என்றெல்லாம் நடாத்தி அதில் “அவிஸ்” அல்லது “அவிர் பாகம்” என்று சொல்லி உணவினைத் தேவர்களுக்கும், கடவுளர்களுக்கும் அந்த நெருப்பிலே இடுவார்கள். அது அவர்களைச் சென்று சேரும் என்பது நம் நம்பிக்கை. அதன் பயனை நம் புலன்களால் அறிய இயலாது.
ஆனால், ஒருவனின் அடி வயிற்றில் கனன்று கொண்டிருக்கும் பசித் தீயாகிய வேள்விக்கு உணவை அளித்தால் அதன் பயனை நம்மால் உணர முடியும். உணரமுடியும் அவ்வளவே!
ஆனால், அதனைப் பெற்றவர்க்குத்தான் தெரியும் அதன் உண்மையான பயன்.
“இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன்.” --- குறள் 87; அதிகாரம் – விருந்தோம்பல்
வேள்விப் பயன் இனைத்துணைத்து என்பது ஒன்று இல்லை = விருந்தோம்பல் என்னும் வேள்வியின் பயன் இவ்வளவுதான் என்று அறுதியிட்டுக் கூற முடியாது; விருந்தின் துணைத் துணை = அது, விருந்தினை ஏற்றவர்களுக்கு எத்தகைய உதவியைப் புரிகிறது என்பதைக் கொண்டுதான் வரையறுத்தல் கூடும்.
விருந்தோம்பல் என்னும் வேள்வியின் பயன் இவ்வளவுதான் என்று அறுதியிட்டுக் கூற முடியாது. அது, விருந்தினை ஏற்றவர்களுக்கு எத்தகைய உதவியைப் புரிகிறது என்பதைக் கொண்டுதான் வரையறுத்தல் கூடும்.
உதவிக்கு மூன்று குறிப்புகளைப் பார்த்தாற்போல திருமூலப் பெருமான் நான்கு குறிப்புகளைத் தருகிறார், அந்தப் பாடலை நாம் ஏற்கெனவே பார்த்துள்ளோம். காண்க 20/12/2022 (656). மீள்பார்வைக்காக:
“யாவர்க்குமாம் இறைவற்கு ஒரு பச்சிலை;
யாவர்க்குமாம் பசுவுக்கு ஒரு வாயுறை;
யாவர்க்குமாம் உண்ணும்போது ஒரு கைப்பிடி;
யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே.” --- திருமந்திரம் முதல் தந்திரம், அறஞ்செய்வான் திறம், பாடல் 2 (பாடல் 252), திருமூலப் பெருமான்
1. இறைவற்குப் பச்சிலை; 2. உயிர்களுக்கு உணவு; 3. உண்ணும் போது பகிர்ந்துண்ணுதல்; 4. அனைவருடன் இன்சொல் பேசுதல். இந் நான்கும் பொதுவான குறிப்புகள் என்கிறார் திருமூலப் பெருமான்.
இறைவற்குப் பச்சிலை என்ற உடன் இருக்கும் மரம் செடி கொடிகளில் இருந்து இலைகளையெல்லாம் பறித்து இறை வடிவங்களின் கால்களில் கொட்டுவதில்லை என்றே நினைக்கிறேன். இதன் பொருள் இயற்கையைப் பாதுகாப்பதுதான். அழிப்பதில்லை!
எங்கள் இல்லத்தில் ஒரு வில்வ மரம் ஒன்று இருந்தது. ஆமாம் இருந்தது. நெடுக வளர்ந்த மரம். இப்போது இல்லை. கோயில்களில் வில்வ இலையை விற்கும் சிலர் அதனை வெட்டி, வெட்டி, ஆமாம் அவர்கள் பறிப்பதில்லை, வெட்டிக் கொண்டுதான் செல்வார்கள். ஒரு நாள் அந்த மரத்தின் ஒரு பெரும் கிளையை முறித்துவிட்டார்கள். முறிந்து போன அந்த இடத்தில் ஒரு வகை பூச்சின் தாக்குதல் ஏற்பட்டு அது அந்த மரத்தையே அழித்துவிட்டது.
இறைவன் என்பதும் இயற்கை என்பதும் ஒன்றுதான். அதிலும் ஒரு குறிப்பை வைத்துள்ளார் நம் திருமூலப் பெருமான். “பச்சை நிறம்” என்ற குறிப்பைக் காட்டியுள்ளார். நாம் தற்போது Green cover என்கிறோம்; பசுமைத் திட்டம் என்கிறோம். கணக்கு காட்டுகிறோம். அவ்வளவே.
இறைவன் குடி கொள்ள வேண்டுமா? பச்சை மாமலைகளைப் பாதுகாத்து வையுங்கள்.
தொண்டரடிப்பொடி ஆழ்வார் பெருமான் பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவர். அவர் அருளிச் செய்த பாசுரங்களில் ஒன்றில் “பச்சை மாமலைப் போல் மேனி” என்று திருவரங்கத்தில் பள்ளி கொண்டுள்ளப் பரமனைப் பாடுகிறார். குறிப்பினைப் பிடிக்க வேண்டும்.
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன் உங்கள் அன்பு மதிவாணன்.
Comments