07/05/2024 (1158)
அன்பிற்கினியவர்களுக்கு:
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல். - குறள் 314; இன்னாசெய்யாமை
இந்தக் குறள் நமக்குத் தெரியும். காண்க 12/03/2021. ஒருவர் நமக்குத் தீங்கிழைத்தாலும், இவருக்கா அவ்வாறு செய்தோம் என்று அவர்கள் வெட்கப்படும் விதமாக நன்மையைச் செய்ய வேண்டும் என்றார்.
இது போன்றதொரு பாடலைச் சான்றாண்மையிலும் வைத்துள்ளார்.
இந்தப் பாடலில் என்ன சொல்கிறார் என்றால் தீங்கிழைத்தவர்க்கும் நன்மை செய்யவிட்டால் அது எப்படி சான்றாண்மை ஆகும் என்கிறார். அஃதாவது, சான்றாண்மையானது விருப்பு வெறுப்பற்று நன்மைகள் செய்வது.
இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு. – 987; - சான்றாண்மை
இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால் = சான்றாண்மையை மேற்கொள்பவர்க்கு, எவர் தீங்கிழைத்தாலும் அதனையும் கடந்து இனியவை செய்யாவிட்டால்; சால்பு என்ன பயத்ததோ = அந்த சான்றாண்மையினால் என்ன பயன்?
சான்றாண்மையை மேற்கொள்பவர்க்கு, எவர் தீங்கிழைத்தாலும் அதனையும் கடந்து, இனியவை செய்யாவிட்டால் அந்த சான்றாண்மையினால் என்ன பயன்?
அஃதாவது, இன்னாசெய்யாமையில் ஒரு நோக்கம் இருந்தது. இது முதல் படி. அஃதாவது, அவர் நாண வேண்டும் என்றவாறு.
ஆனால், சான்றாண்மையை வரையறுக்கும் பொழுது நல்லவை செய்தல் சான்றாண்மையின் இலக்கணம் என்றார். இதுதான் அடைய வேண்டிய உயரம். காண்க 03/05/2024.
கடனென்ப நல்லவை யெல்லாம் கடனறிந்து
சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு. – 981; - சான்றாண்மை
“என் கடன் பணி செய்து கிடப்பதே” என்றார் திருநாவுக்கரசர் பெருமான்.
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் மதிவாணன்.
Comments