29/03/2023 (755)
இடுக்கண் அழியாமை என்ற அதிகாரத்தின் முடிவுரைக்கு வந்துவிட்டோம். இந்தக் குறளுடன் அரசு இயலும் முற்றுகிறது.
Pain and Pleasure are a matter of perceptions. இன்பமும் துன்பமும் நமது பார்வைகளைப் பொறுத்தே!
கோணங்களை மாற்றினால் வட்டம்கூட நேர்கோடு ஆகிவிடும். எல்லாமே பார்வைகள்தான்.
தன் பணியைச் செய்து கொண்டிருப்பவன் தான் சந்திக்கும் துன்பங்களை இன்பமாக மேற்கொண்டால் அது அவனின் பகைவர்களையும் மலைக்கவைக்கும். அந்த சிறந்த வழிமுறையை, அவன் பகைவர்களும் பின்பற்ற விருப்பப்படுவார்களாம்.
அதைவிடச் சிறப்பு வேறு என்ன இருக்கமுடியும் என்கிறார் நம் பேராசான்.
“இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகும்தன்
ஒன்னார் விழையும் சிறப்பு.” --- குறள் – 630; அதிகாரம் – இடுக்கணழியாமை
இன்னாமை இன்பம் எனக்கொளின் = ஒருவன் தனது செயல்களில் வரும் இடுக்கண்களை இன்பமாக எதிர் கொண்டு வெற்றிகளைக் குவித்துக் கொண்டிருப்பான் என்றால்; தன் ஒன்னார் விழையும் சிறப்பு ஆகும் = அந்த சிறந்த வழிமுறையை, அவன் பகைவர்களும் பின்பற்ற விருப்பப்படுவார்களாம்.
ஒருவன் தனது செயல்களில் வரும் இடுக்கண்களை இன்பமாக எதிர் கொண்டு வெற்றிகளைக் குவித்துக் கொண்டிருப்பான் என்றால், அந்த சிறந்த வழிமுறையை, அவன் பகைவர்களும் பின்பற்ற விருப்பப்படுவார்களாம்.
அதாவது, இடுக்கண் அழியாமை என்பது எப்படி இருக்கனும் என்றால் நம் பகைவரும் மூக்கின் மேல் கை வைத்து, அவர்களும் இப்படி இருந்தால் எப்படி இருக்கும் என்று மலைக்கும் வகையில் இருக்கனும் என்கிறார்.
அரசியல் முற்றிற்று.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள் முதலான: www.easythirukkural.com)
Comments