28/03/2023 (754)
“இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
துன்பம் உறுதல் இலன்.” --- குறள் 628; அதிகாரம் – இடுக்கணழியாமை
ஆமாம், இந்தக் குறளை நாம் பார்த்து விட்டோம்.
வரப்போகும் பாடல், இதன் அடுத்தப் பகுதி.
இரண்டு பாடல்களும் “துன்பம் உறுதல் இலன்” என்றே முடியும்!
முதல் பகுதி: இன்பம் விழையாமல், இடும்பை இயல்பென்பானுக்கு துன்பம் கிடையாது.
இரண்டாம் பகுதி: இன்பம் விழையாமல் இடும்பை இயல்பென்று இருந்து வெற்றி பெற்றால் கொஞ்சம் கெத்தாக இருக்குமா இல்லையா? இருக்கும். அப்போதும் ஓவராக ஆடக்கூடாது என்கிறார்.
ஒவராப் போனால் வைச்சுடுவாங்க கேமரா!
ஆகையினால், அந்த இன்பத்துள் இன்னும் இன்பம் வேண்டும் என்று விரும்பக்கூடாதம்.
சரி, அப்போ அவனுக்குத் துன்பம் வராதா என்றால் அதற்கெல்லாம் உத்திரவாதமில்லை. அப்போ என்னதான் சொல்கிறார் நம் பேராசான் என்கிறீர்களா?
அவனுக்கு துன்பத்துள் துன்பம் வராதாம்! அதாவது, துன்பத்துக்கு மேல துன்பம் வந்து நோக அடிக்காதாம். சொல்வது நம் பேராசான். கேட்டுக்கொள்வது நம்ம வேலை.
“இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்
துன்பம் உறுதல் இலன்.” --- குறள் 629; அதிகாரம் – இடுக்கணழியாமை
இன்பத்துள் இன்பம் விழையாதான் = தன் செயல்களால் இன்பம் வரும்போது அதிலேயே மனது மயங்காதவன்; துன்பத்துள் துன்பம் உறுதல் இலன் = துன்பத்துள் துன்பம் அடையமாட்டான்.
இந்த அதிகாரத் தலைப்பை மறந்துடாதீங்க. இடுக்கண் வரும்போது மனதை விட்டு விடக்கூடாது என்பதுதான் மையக் கருத்து.
“...மலை போலே வரும் சோதனை யாவும்
பனி போல் நீங்கி விடும்
நம்மை வாழவிடாதவர் வந்து நம் வாசலில்
வணங்கிட வைத்து விடும்
செய்த தர்மம் தலை காக்கும்
தக்க சமயத்தில் உயிர் காக்கும்
கூட இருந்தே குழி பறித்தாலும்
கொடுத்தது காத்து நிக்கும்...” --- திரைப்படம் – தர்மம் தலை காக்கும் (1963), கவியரசர் கண்ணதாசன் வரிகளில், திரை இசைத் திலகம் கே.வி. மகாதேவன் அவர்களின் இசையில்.
அறம் அல்லது தர்மம் என்பது விதித்தன செய்தல், விலக்கியன ஒழித்தல் அவ்வளவே. என் ஆசிரியர் அடிக்கடி வலியுறுத்தும் கருத்து இது.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள் முதலான: www.easythirukkural.com)
Σχόλια