13/02/2024 (1074)
அன்பிற்கினியவர்களுக்கு:
நாம் நினைத்தபடி நினைத்த வழியில் நீங்கலாம் என்று சொன்னவர், அடுத்த குறளில் இருக்கும்வரை இன்பமாகவும் இருக்கலாம் என்கிறார்.
இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னுந்
துன்பத்துள் துன்பம் கெடின். – 369; - அவா அறுத்தல்
அவா என்னும் துன்பத்துள் துன்பம் கெடின் = நம்மைச் சுற்றி சுழன்றடிக்கும் கொடுமையிலும் கொடுமையான துன்பங்களைத் தரும் ஆசைகளை நீக்கினால்; ஈண்டும் இடையறாது இன்பம் = வருவன இடைநில்லா இன்பங்கள்.
நம்மைச் சுற்றி சுழன்றடிக்கும் கொடுமையிலும் கொடுமையான துன்பங்களைத் தரும் ஆசைகளை நீக்கினால் வருவன இடைநில்லா இன்பங்கள்.
இந்த அதிகாரத்தின் முடிவுரையான குறளை நாம் முன்பே சிந்தித்துள்ளோம். அவா எப்போது அற்றுப் போகும் என்பதனையும் அற்றுப் போனால் நமக்கு எப்போதும் அழிவில்லை என்றும் சொன்னார். காண்க 27/02/2021, 21/01/2024. மீள்பார்வைக்காக அந்தக் குறள்:
ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும். – 370; - அவா அறுத்தல்
விரித்துக் கொண்டே செல்ல அவா. அவாவினை அறுக்கச் சொன்னதால் நிறுத்துகிறேன்.
துறவற இயல் முற்றும்.
அறத்துப்பாலின் இறுதி அதிகாரமான ஊழ் அதிகாரத்தை ஏற்கெனவே சுவைத்துள்ளோம்.
அறத்துப்பால் முற்றும்.
மேலும் பேசுவோம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Comments