top of page
Search
Writer's pictureMathivanan Dakshinamoorthi

இன்பம் விழையான் ... 615

19/03/2023 (745)

இன்பத்தை நுகர வேண்டும்; துன்பத்தைத் தவிர்க்க வேண்டும் என்பது அனவருக்குமே விருப்பமானது. இதனை Pleasure and Pain principle என்கிறார் ஜெரிமி பெந்தம் (Jeremy Bentham) என்னும் பெருமகனார்.


Nature has placed mankind under the governance of two sovereign masters, pain and pleasure. --- Jeremy Bentham


துன்பம் மற்றும் இன்பம் என்ற இரண்டும்தான் நம்மை, நம் செயல்களைத் தீர்மானிக்கும் காரணிகள் என்கிறார். ஆனால், இரண்டுமே நமது பார்வைகள்தான் (Perceptions) என்றும் எடுத்துச் சொல்கிறார். அருமையான கட்டுரை. நேரம் கிடைக்கும் போது வாசிக்க வேண்டும்.


தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களுக்கும், தலைமை பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பவர்களுக்கும், அந்தப் பொதுவான விருப்பங்களின் மேலிருக்கும் பார்வைகள் மாறுபட்டதாக இருக்கும், இருக்க வேண்டும்! இல்லையென்றால் அந்த சுய விருப்பு வெறுப்புகளே தடைகளாகும்.


விவேகானந்தப் பெருமான், நம் நாட்டினை உயர்த்த, நம் அனைவருக்கும் தேவையானது இரண்டு என்று குறிப்பிடுகிறார். ஒன்று தொண்டு; மற்றொன்று துறவு.


தொண்டு என்றால்? உதவி என்று உச்சரிக்கும் உதடுகளுக்கு உணவு அளிப்பது, பிறரின் துன்பத்தைக் களைவது. அதுதான் தொண்டு.


துறவு என்றால்? வாழ்க்கையைத் துறந்துவிடுவதா? அன்று!

அவர் துறக்கச் சொல்வது சுயநலத்தை! எல்லாச் செயல்களிலும் சுயநலமே மிகுவதால்தான் இந்த உலகம் தத்தளிக்கிறது.


தொண்டையும் துறவையும் கொண்டு செயல்படுபவர்கள்தான் இந்த உலகத்தைத் தாங்கிக் கொண்டிருக்கும் தூண்கள்.


இன்பம் விழையான் வினைவிழைவான் தன் கேளிர்

துன்பம் துடைத்தூன்றும் தூண்.” --- குறள் 615; அதிகாரம் – ஆள்வினை உடைமை


இன்பம் விழையான் வினைவிழைவான் = சுய நலத்தை விரும்ப மாட்டான்; தான் ஆற்ற வேண்டிய கடமைகளை, செயல்களை விரும்பி ஏற்றுக் கொண்டு செய்வான்;

தன் கேளிர் துன்பம் துடைத்தூன்றும் தூண் = தன்னைச் சார்ந்து இருப்பவர்களின் துன்பங்களைக் களைந்து அவர்களைத் தாங்கிக் கொண்டிருக்கும் தூணும் அவன் தான்.


சுய நலத்தை விரும்ப மாட்டான்; தான் ஆற்ற வேண்டிய கடமைகளை, செயல்களை விரும்பி ஏற்றுக் கொண்டு செய்வான்; தன்னைச் சார்ந்து இருப்பவர்களின் துன்பங்களைக் களைந்து அவர்களைத் தாங்கிக் கொண்டிருக்கும் தூணும் அவன் தான்.


முயற்சியின் காரியம் இன்பம்; இன்பத்திற்கு காரணம் முயற்சி. காரியமான இன்பத்தை விரும்பாமல் அதற்கு காரணமான முயற்சியை விரும்புபவன் தன் கேளிர் துன்பங்களைத் துடைத்து ஒழிப்பான். காரணங்கள் மேல் கண் வைக்க!


நமது சமுகத்தை சின்னதும் பெரியதுமாகப் பல தூண்கள் தாங்கிக் கொண்டிருப்பதால்தான் நாம் நிம்மதியாக இயங்கிக் கொண்டும் உறங்கிக் கொண்டும் இருக்கிறோம்! வாழிய அவர்கள்.


மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.


(வலைதளத்தில் தினமும் திருக்குறள் முதலான: www.easythirukkural.com)







Comments


Post: Blog2_Post
bottom of page