27/03/2023 (753)
1. இடுக்கண் வருங்கால் நகுக
2. அறிவுடையான் உள்ளத்தின் உள்ள இடும்பை கெடும்
3. இடும்பைக்கு இடும்பை படுப்பர்
4. பகடன்னான் உற்ற இடும்பை இடுக்கண் இடர்படும்
5. அழிவிலான் உற்ற இடும்பை இடுக்கண்படும்
6. ஓம்புதல் தேற்றாதவர் அற்றேம் என்று அல்லல் படுபவோ
7. மேலானவர்கள் இடும்பைக்கு கலக்கத்தைக் கொள்ள மாட்டார்
நம் பேராசான், இந்த அதிகாரத்தில் இதுவரை சொல்லியிருக்கும் ஏழு குறள்களின் ஒரு வரி செய்திகள்தான் மேலே காண்பது.
துன்பம் வரும் போது சிரிங்க என்று ஆரம்பித்து, அது பெரும் கலக்கத்தைக் கொடுத்தாலும் கலங்காதீங்க என்று மெது, மெதுவாக இதுவரை அழைத்துவந்து விட்டார்.
அடுத்து, என்ன சொல்கிறார் என்றால், நாம் செல்லும் வழியில் இடும்பைகளைச் சந்திப்பது என்பது இயல்பு. இன்பத்தை மட்டும்தான் நான் சந்திப்பேன் என்றால் கொஞ்சம் கடினம்தான் என்கிறார்.
வாழ்க்கையில் இன்பம் வேண்டாமா? என்று கேட்டால் நிச்சயமாக வேண்டும். அது எப்படி என்றால் நாம் நினைத்ததைச் செய்து முடிக்கிறோமே அப்போது அதில் கொஞ்சம் இளைப்பாறலாம், இன்புறலாம்!
ஆனால், செய்கிற வேலையை விட்டுவிட்டு வேறு ஒரு இடத்தில் போய் இன்பத்தைத் தேடக்கூடாது! இதுதான் முதல் குறிப்பு.
சரி, அப்படி நிகழ்ந்துவிட்டது. அதுகூட பரவாயில்லை. அப்படி கிடைக்கும் இன்பத்திற்கு அடிமையாகி விடக்கூடாது என்பதுதான் இரண்டாம் குறிப்பு.
அடிமையாகும் ஆசாமிகள்தான் இன்பம் மட்டுமே விழைபவர்கள். ஆனால், தலைவனாக வேண்டும் என்பவன் இன்பம் விழையானாக இருக்க வேண்டும் என்கிறார்.
இந்த வாட்ஸப் (Whatsapp) இருக்கே அது நல்லா ஜாலியாகத்தான் இருக்கு. தகவல்களும் பயன் உள்ளதாகத்தான் தோணுது. ஆனால், அதில் உட்கார்ந்தால் நேரம் போவதே தெரிவதில்லை!
எல்லா கருவிகளும் இருமுனை கொண்ட கூர்வாள்தான்! நாம்தான் கவனமாக இருக்கவேண்டும் என்கிறார் நம் பேராசான்.
சரி நாம் குறளுக்கு வருவோம்.
“இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
துன்பம் உறுதல் இலன்.” --- குறள் 628; அதிகாரம் – இடுக்கணழியாமை
இன்பம் விழையான் = இன்பத்தை மட்டுமே எதிர்கொள்ள வேண்டும் என்று நினைக்கமாட்டாதவனும்; இடும்பை இயல்பென்பான் = செல்லும் பாதையில் துன்பம் என்பது இயல்பு என்று எடுத்துக் கொண்டு தொடர்ந்து பயணிப்பவனும்; துன்பம் உறுதல் இலன் =முடிவில் துன்பம் அடைவது இல்லை.
இன்பத்தை மட்டுமே எதிர்கொள்ள வேண்டும் என்று நினைக்கமாட்டாதவனும், செல்லும் பாதையில் துன்பம் என்பது இயல்பு என்று எடுத்துக் கொண்டு தொடர்ந்து பயணிப்பவனும், முடிவில் துன்பம் அடைவது இல்லை, இல்லை, இல்லவே இல்லை.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள் முதலான: www.easythirukkural.com)
இடும்பை என்றால் வாள்? இடர்? விளக்கம் தேவை...