05/06/2024 (1187)
அன்பிற்கினியவர்களுக்கு:
உலகு இயற்றியான் கெடுக என்று சொன்னவர், அடுத்து இரந்துதான் வாழ வேண்டும், வேறு வழியே இல்லை என்பது கொடுமையிலும் கொடுமை என்கிறார்.
வண்மை, வன்மை என்று இரு சொல்கள் உள்ளன என்று நமக்குத் தெரியும்.
(டண்ணகரம்) வண்மை என்றால் வலிமை, வளமை, அழகு, ஈகை, கொடை என்றெல்லாம் பொருள்படும்.
(றன்னகரம்) வன்மை என்றால் கொடுமை, கடினம் என்று பொருள்.
வன்சிறை என்றால் கடுங்காவல்; வன்சொல் என்றால் கடுஞ்சொல்; வன்செவி என்றால் உணர்ச்சியற்ற காது; வன்பொறை என்றால் பெரும் பாரம்; வன்மம் என்றால் தீராப் பகை.
சரி, ஏன் இந்தச் சொல் ஆராய்ச்சி என்று கேட்கலாம். வருகின்ற குறளில் இரந்துதான் வாழவேண்டும் என்ற நிலையை “வன்மையின் வன்பாட்டது இல்” என்கிறார். அந்தக் கொடுமைக்கு மேல் கொடுமை இல்லை என்கிறார்.
இன்மை இடும்பை இரந்துதீர் வாமென்னும்
வன்மையின் வன்பாட்ட தில். – 1063; - இரவு அச்சம்
இன்மை இடும்பை = வறுமை கொடியது; இரந்து தீர்வாம் என்னும்
வன்மையின் வன்பாட்டது இல் = அதனை எதிர்க்கொள்ள பிச்சை எடுப்பதைத் தவிர வேறு வழியே இல்லையே என்ன செய்வேன் என்னும் நிலையைப் போன்ற கொடுமையிலும் கொடுமை வேறு இல்லை.
வறுமை கொடியது. அதனை எதிர்க்கொள்ள பிச்சை எடுப்பதைத் தவிர வேறு வழியே இல்லையே என்ன செய்வேன் என்னும் நிலையைப் போன்ற கொடுமையிலும் கொடுமை வேறு இல்லை.
பசி வந்திடப் பத்தும் பறந்துபோம் என்றார் ஒளவையார் பெருந்தகை. காண்க 07/07/2021.
இந்த அதிகாரத்தின் தலைப்பு இரவு அச்சம். அஃதாவது, இரப்பதற்கு அச்சம்; இரக்கும் நிலையால் வரும் கொடுமைக்கு அச்சம் என்று பொருள்படும்.
இந்தக் குறளுக்கு அறிஞர் பெருமக்களின் உரைகள் வேறு பார்வையை வைக்கின்றன.
பேராசிரியர் வ.சுப. மாணிக்கம்: வறுமைத் துன்பத்தை வாங்கித் தீர்ப்பேன் என்பது பெரிய முரட்டுத்தனமாம்.
புலவர் குழந்தை: வறுமைத் துன்பத்தை முயற்சியால் நீக்காமல் இரந்து நீக்குவோம் என்று எண்ணும் வன்மையைப் போல முரட்டுத் தன்மையுடையது வேறொன்றுமில்லை.
வன்பாடு என்பதற்கு முரட்டுத் தன்மை என்கிறார் புலவர் பெருமான்.
இதுபோன்றே அறிஞர் பெருமக்கள் பலர் உரை கண்டுள்ளார்கள்.
வறுமையை இரந்து தீர்ப்போம் என்று எந்த இரப்பவரும் நினைக்க வாய்ப்பில்லை. அவர்களே ஏதிலார் ஆகிவிட்டனர். வாழ வழியுமில்லை; வீழ இடமுமில்லை. அவர்களிடம் ஏது முரட்டுத் தன்மை? என்னதான் நடக்கும் நடக்கட்டுமே என்ற உணர்ச்சியற்ற ஒரு நிலையில்தான் பெரும்பாலானவர்கள் இருக்க முடியும்.
Beggers cannot be choosers என்பார்கள் ஆங்கிலத்தில். அஃதாவது, இரப்பவர்கள் இது வேண்டும் அது வேண்டும் என்று தேர்ந்தெடுக்க முடியுமா என்ன?
மணக்குடவர் பெருமானின் உரை உற்று நோக்கத் தக்கது.
மணக்குடவர் பெருமான்: வறுமையாலுற்ற துன்பத்தைப் பிறர்மாட்டு இரந்து பெற்ற பொருளினாலே தீர்ப்பேமென்று கருதுகின்ற வன்மைபோல, வன்பாயிருப்பது பிறிது இல்லை. இஃது இரந்தாலும் நல்குரவு தீரா தென்றது.
வன்மை என்ற சொல்லை அப்படியே உரையிலும் பயன்படுத்தியுள்ளார்.
“வன்பாயிருப்பது பிறிது இல்லை” என்றதனால் அதனினும் கொடுமையாக இருப்பது வேறு ஒன்றும் இல்லை என்று நாம் மணகுடவர் பெருமானின் உரையை விரிக்கலாம். வறுமையானது இரப்பதனால் தீராது எனவே அது கொடுமையிலும் கொடுமை என்று மேலும் சொல்கிறார் மணக்குடவர் பெருமான்.
சிலருக்கு இரந்துதான் உயிர் வாழ இயலும் என்றால் அந்த உலகு இயற்றியான் கெடுக என்றவர் இந்தக் குறளில், வாழ வழியில்லாதவனை வகையில்லாதவனை, உலக ஓட்டத்தில் ஒதுக்கப்பட்டவனை, அனைவரும் கைவிட்டவனை “உன் முயற்சியால் நீயே வெளியே வர வேண்டும்” என்று சொல்வாரா என்ன? இது ஓர் உணர்வற்ற நிலையை (insensitive) அல்லவா தோற்றுவிக்கும்.
சரி, பிச்சை எடுப்பதை நம் பேராசான் ஊக்கிவிக்கிறாரா? என்ற கேள்வி எழலாம். ஆனால், நம் பேராசான் ஊக்கமுடைமை, மடியின்மை, ஆள்வினை உடைமை, இடுக்கண் அழியாமை என்னும் பல அதிகாரங்களில் விளக்கியுள்ளார்.
இங்கே, ஒழிபியலில், எதற்கும் வழியில்லாமல் இருப்பர்களை இந்த உலகம் எப்படிப் பார்க்க வேண்டும் என்பதனை நல்குரவு, இரவு, இரவு அச்சம் என்னும் அதிகாரங்களில் நமக்குத் தெளிவுபடுத்துகிறார்.
எனவே, இரவு அச்சத்தில் இருப்பவர்களை “நீ ஓடி ஆடி முயன்று உன் வறுமையைப் போக்கிக் கொள். இரந்துதான் போக்கிக் கொள்வேன் என்கிறாயே அது உன் மூர்க்கத்தனத்தைக் காட்டுகிறது.” என்று யாராவது சொல்ல முடியுமா என்ன?
இந்தக் கருத்துகளை உங்கள் சிந்தனைக்கே விட்டுவிடுகிறேன்.
இப்படி வேண்டுமானால் அந்தக் குறளுக்கு வேறு ஓர் உரையை எழுதலாம்:
வறுமை கொடியதாகத்தான் இருக்கும். அதனை இரந்தே நீ போக்கிக் கொள்ளலாம் என்று ஒருவர் சொன்னால் அதனைப் போன்ற கொடுமையிலும் கொடுமை வேறு இல்லை.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதனைத் தெரிவியுங்கள்.
நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Comments