08/05/2024 (1159)
அன்பிற்கினியவர்களுக்கு:
ஆன்றோர்களே, சான்றோர்களே என்று மேடையில் பேசுபவர்கள் பயன்படுத்துவார்கள்.
ஆன்றோர்க்கும் சான்றோர்க்கும் என்ன வித்தியாசம்? இல்லை இரண்டும் ஒன்றா?
ஆன்ற என்றால் அகன்ற, பரந்த என்று பொருள். ஆன்றார், ஆன்றோர் என்றால் அறிவில் அகண்டு பரந்து இருப்பவர்;
சான்றோர் என்றால் நல்ல குணங்களைத் தம் அகத்தே கொண்டிருப்பவர்.
அறிவு விரிய விரிய தெளிவு பிறக்கும்; தெளிவு பிறக்க உள்ளே மாற்றம் நிகழும்; மாற்றம் நிகழ எண்ணம் சீராகும்; எண்ணம் சீராக நல்ல குணங்கள் உள்ளத்தில் படியும்.
சான்றோர் என்பவர் அறிவில் உயர்ந்து அன்பு, நாண் உள்ளிட்ட பல நல்ல குணங்களைத் தம் வசமாகியவர்.
நம் பேராசான் அறிவின் குறைபாடு ஓர் பெரிய குறைபாடு என்றார். காண்க 12/08/2023. மீள்வார்வைக்காக:
அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை
இன்மையா வையா துலகு.” 841; புல்லறிவாண்மை
ஆய்ந்தறியும் அறிவு மட்டும் இருந்தால் போதும். அவனிடம் பொருள் செல்வம் உள்ளிட்ட மற்றவை இல்லை என்றாலும் அவனை இந்த உலகம் தூற்றாது என்றார்.
அறிவில் தெளிவு முதல் படி. இரண்டாம் படி, சால்பென்னும் திண்மை.
நல்லவை செய்தல் கடமை என்று ஆரம்பித்துவிட்டால், தோற்றமும் பொலிவும் ஒரு பொருட்டல்ல.
அந்தத் திண்மை ஒருவர்க்கு உண்டாகிவிட்டால் அவர்களிடம் பொருள் இல்லையே, பண பலம் இல்லையே என்றெல்லாம் இந்த உலகம் இழிவாகப் பார்க்க வழியில்லை.
உயர்வும் தாழ்வும் நம் மனத்தில் இருக்கின்றன. மனமானது உயர்ந்த இடத்தில் அமர்ந்து கொண்டால், நல்லவைகளுக்கு மட்டும் செவி சாய்த்தால், நம்மை யாரும் சாய்த்து விடவே முடியாது.
இன்மை ஒருவற்கு இளிவன்று சால்பென்னும்
திண்மை உண்டாகப் பெறின். – 988; - சான்றாண்மை
சால்பென்னும் திண்மை உண்டாகப் பெறின் = நல்ல குணங்களை ஆளும் தன்மையில், அஃதாவது, சான்றாண்மையில் திண்மை உண்டாகப் பெறின்; இன்மை ஒருவற்கு இளிவன்று = பொருள் செல்வம் முதலான செல்வங்கள் இல்லாமல் இருப்பதனை இந்த உலகம் இழிவாகப் பார்க்க வழியில்லை.
நல்ல குணங்களை ஆளும் தன்மையில், அஃதாவது, சான்றாண்மையில் திண்மை உண்டாகப் பெறின், பொருள் செல்வம் முதலான செல்வங்கள் இல்லாமல் இருப்பதனை இந்த உலகம் இழிவாகப் பார்க்க வழியில்லை.
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் மதிவாணன்.
Comments