28/01/2021 (11)
வயது 10க்கும் 40க்கும் இடைப்பட்ட காலம் தான் ஒருவன் தன்னையே விதைத்துக் கொள்ளும் காலம்.
என்ன இன்றைக்கு “கருத்தா” இருக்கேன்னு பார்க்கறீங்க, அதானே? எல்லாம் நேற்றைய அனுபவங்கள் தான். நிற்க.
திருக்குறளில் ஒரு அதிகாரம் “நல்குரவு”. இந்தப் பதம் தற்கால சொல்லாடலில் இல்லை. இதற்கு பொருள் என்ன சொல்றங்கன்னா:
“நாம இயல்பாக வாழ தேவைப் படுகிற பொருட்கள் நம்மிடம் இல்லாத கொடுமைதான். “ இது தான் பொருள்!
‘வறுமை’ அல்லது ‘இல்லாமை’ ன்னு ஒரு வார்த்தை சொல்லியிருந்தா புரிஞ்சிருக்குமேன்னு நீங்க சொல்றது என் காதிலே விழுகிறது. நேற்றைய குறளைக் கவனப் படுத்திக்கிறேன். மன்னிக்க.
இல்லாம இருக்கிறது கொடுமை தான். அந்தக் கொடுமையிலும் கொடுமை எது தெரியுமா? என்ற கேள்வியை நம்ப வள்ளுவப் பெருந்தகை எழுப்பி அதுக்கு என்ன சொல்லப் போகிறார் கேட்கலாம்ன்னு ஆவலா நிமிர்ந்து உட்கார்ந்தேன். அவர் தான் உவமைக்கு உச்சமாச்சே!
டகார்ன்னு போட்டு உடைச்சார். ‘இல்லாத கொடுமை’ க்கு உவமை இல்லாத கொடுமையேதான். வேற தேடிப்பார்த்தேன். சரியா வரலைன்னு கிளம்பிட்டார். அந்தக் குறள் தான் 1041 வது குறள்.
“இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்
இன்மையே இன்னாதது.” --- குறள் 1041; அதிகாரம் - நல்குரவு
இந்த குறளுக்கு, என் ஆசிரியர் சொன்ன கருத்தைத் தான் ஆரம்பத்திலே கொடுத்தேன்.
மேலும் சொன்னார்: அந்த விதையிலிருந்து நாம வருவிக்கிறது பகைவர்களையும் அமைதிப்படுத்தும் கூர்வாளாயிருக்கனும். சரியான்னு கேட்டுட்டு அதுக்கும் ஒரு குறள் இருக்கு கண்டுபிடின்னு ஒரு கொக்கியைப் போட்டார். தேடுவேன் உங்கள் உதவியோடு. எந்த விதைன்னு மறந்து விட்டு இருந்தால் இந்தப் பதிவின் முதல் வரியை மீண்டும் படிக்கவும்.
நன்றி. மீண்டும் சந்திப்போம் வேறு ஒரு குறளுடன்.
உங்கள் அன்பு மதிவாணன்
Comments