16/09/2023 (924)
அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:
இருந்தும் ஒருவனுக்குக் கொடுக்க மனமில்லையென்றால் அவனை என்ன சொல்வது? என்று கேட்கிறார் நம் பேராசான்.
என்ன தீவிரமாக யோசிக்க ஆரம்பிச்சிட்டீங்களா? யோசிக்காதீங்க! அவன் ஒரு மடையன் என்கிறார் நம் பேராசான்.
என்ன நம்ம பேராசானா அது போன்ற வார்த்தைகளைப் (unparliamentary words) பயன்படுத்தறாரு?
அவர் அப்படிச் சொல்லலை! “மடையன்” என்று சொல்லாமல் மிகவும் மரியாதையாக, அதுவும் இரு பாலாருக்கும் பொருந்தும் வகையில், “மடவார்” என்கிறார். Gender neutral (பாலின நடுநிலை) மிக முக்கியம்! அதுவும் திட்டும்போது நடுநிலை மிக மிக அவசியம்!
“உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
மடமை மடவார்கண் உண்டு.” --- குறள் 89; அதிகாரம் – விருந்தோம்பல்
உடைமையுள் இன்மை = இருந்தும் இல்லாதவன் போல; விருந்தோம்பல் ஓம்பா மடமை = வந்த விருந்தினர்களை உபசரிக்காமல் இருக்கும் பேதைமை; மடவார்கண் உண்டு = பேதைகளிடம்தான் காணலாம்.
இருந்தும் இல்லாதவன் போல வந்த விருந்தினர்களை உபசரிக்காமல் இருக்கும் பேதைமை பேதைகளிடம்தான் காணலாம்.
மடவார் என்ற சொல்லை இரண்டு இடங்களில்தான் பயன்படுத்துகிறார். ஒன்று விருந்தோம்பலிலும், மற்றொன்று பொறையுடைமை அதிகாரத்திலும் பயன்படுத்துகிறார். இவ்விரு இடங்களிலிலும் விருந்துடன் இணைத்தே வலியுறுத்துகிறார்.
“உடைமையுள் இன்மை” என்றவர் “இன்மையுள் இன்மை” என்கிறார். அஃதாவது, இருக்கும்போதும் கொடுக்காதது மடைமை என்றவர் வறுமையுள் வறுமை எது தெரியுமா என்று கேட்கிறார். அதற்கு வறுமையுள் வறுமை விருந்தினைக் கவனிக்க முடியாத நிலைதான் என்கிறார்.
“இன்மையு ளின்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை.” --- குறள் 153; அதிகாரம் – பொறையுடைமை
ஒருவுதல் = ஒரால் = நீக்குதல்;
இன்மையுள் இன்மை விருந்து ஒரால் = வறுமையுள் வறுமையாவது யாதெனின் விருந்தினைக் கவனிக்க முடியாத நிலை; வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை = வலிமையுள் வலிமையாவது யாதெனின் அறிவில்லாமல் செய்பவர்களின் செயல்களைப் பொறுத்தல்.
வறுமையுள் வறுமையாவது யாதெனின் விருந்தினைக் கவனிக்க முடியாத நிலை. வலிமையுள் வலிமையாவது யாதெனின் அறிவில்லாமல் செய்பவர்களின் செயல்களைப் பொறுத்தல்.
இது பொறுமை கடலினும் பெரிது என்பதற்காகச் சொன்னது.
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன் உங்கள் அன்பு மதிவாணன்.
Comments