top of page
Search
Writer's pictureMathivanan Dakshinamoorthi

இன்மையுளின்மை ... 153, 154,

28/10/2023 (966)

அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:

வறுமையுள் வறுமையாவது யாதெனின் விருந்தினைக் கவனிக்க முடியாத நிலை. வலிமையுள் வலிமையாவது யாதெனின் அறிவில்லாமல் செய்பவர்களின் செயல்களைப் பொறுத்தல். காண்க 16/09/2023 (924). மீள்பார்வைக்காக:


இன்மையு ளின்மை விருந்தொரால் வன்மையுள்

வன்மை மடவார்ப் பொறை.” --- குறள் 153; அதிகாரம் – பொறையுடைமை


நம்மிடம் நல்ல குணங்கள் நீங்காமல் இருக்க வேண்டும் என்றால் பொறையுடைமைதான் அடிப்படையாம். அதைப் போற்றிப் பொறுமையாக இருந்தால் பெரிய மனிதனாகலாமாம்.


நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை

போற்றி யொழுகப் படும்.” --- குறள் 154; அதிகாரம் – பொறையுடைமை


நிறையுடைமை = நல்ல குணங்கள் நிறைந்திருக்கும் தன்மை; நீங்காமை வேண்டின் = நீங்காமல் இருக்க வேண்டும் என்றால்; பொறையுடைமை

போற்றி ஒழுகப்படும் = பொறுமையைப் போற்றி ஒழுக வேண்டும்.


நல்ல குணங்கள் நிறைந்திருக்கும் தன்மை நம்மிடம் நீங்காமல் இருக்க வேண்டும் என்றால் பொறுமையைப் போற்றி ஒழுக வேண்டும்.


எதையுமே சற்று நிதானமாகச் செய்தால் நலம்தான். ஆகையினால்தான், பதறிய காரியம் சிதறும் என்றார்கள்!


அடுத்து வரும் குறளை நாம் முன்பே சிந்தித்துள்ளோம். காண்க 20/01/2023 (687). மீள்பார்வைக்காக:


ஒறுத்தாரை யொன்றாக வையாரே வைப்பர்

பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து.” --- குறள் 155; அதிகாரம் பொறையுடைமை


பொறுமை இல்லாதவர்களை நல்லவர்களில் ஒருவராக வைக்கமாட்டார்கள். பொறுமை காத்து அன்பின்வழி நிற்பவர்களை இந்த அறிவுலகம் பொன்னைப் போலப் போற்றி பாதுகாக்கும்.


மீண்டும் சந்திப்போம். நன்றியுடன் உங்கள் அன்பு மதிவாணன்.





Comments


Post: Blog2_Post
bottom of page