26/01/2023 (693)
எழுபத்தி ஆறாம் எலிகேசின்னு ஒரு ராஜா. (ஏன், இருக்கக் கூடாதா என்ன?).
அவன் யாரையும் கலந்து ஆலோசிக்காமல் ஏதாவது ஏடாகூடமாகச் செய்து மாட்டிப்பானாம்.
பாவம் ராஜான்னு யாராவது போய் காப்பாற்றி இருப்பாங்கன்னுதானே நினைக்கறீங்க?
பாவம் நீங்க. அதுக்குன்னு ரொம்ப நல்லவங்களா இருக்கீங்க!
அப்படித்தான் பல முறை நடந்ததாம். அப்புறம் மக்கள் ரொம்பவே உஷாராயிட்டாங்களாம்.
முன்பெல்லாம், அவன் அந்த மாதிரி ஏதாவது ஏடாகூடமாக பண்ணிட்டு மாட்டும் போது, அவனுடன் போகும் மந்திரிமார்களில் யாராவது ஒருவர் காப்பாற்றிவிடுவாராம். அவ்வளவுதான் அன்றைக்கு அவர் சீட்டு காலி.
அவன் என்ன பண்ணுவானாம், அந்த மந்திரியைப் பயங்கரமாத் திட்டி, அந்த மந்திரியாலேதான் அவனுக்கு அப்படி ஆயிட்டுதுன்னு குற்றம் சாட்டி அவரின் சீட்டை கிழித்து அனுப்பிடுவானாம்.
இப்படியும் நடக்குமான்னுதானே கேட்கறீங்க? நிச்சயம் ஒவ்வொரு இடத்திலும் நடக்கும் செயல்தான் இது.
சில எலிகேசித் தலைவர்கள் (Managerகள்...), தான் செய்யும் தவற்றை தன் கீழ் உள்ளவர்மேல் போட்டு தப்பிப்பதை பார்த்து இருக்கீங்க இல்லையா? அவர்கள் எல்லாம் நம்ம எழுபத்தி ஆறாம் எலி கேசியின் வாரிசுகள்தான்!
எலி கேசிகளின் பழக்கம் அறிந்தவர்கள் எப்படி உதவ வருவார்கள்? பிறகு, பொறியிலே சிக்கிய எலி மாதிரி கூண்டுக்குள்ளேயே இருக்க வேண்டியதுதான்!
என்ன இது? இதெல்லாம் ஒரு கதைன்னு சொல்கிறாயா என்றுதானே கேட்கிறீர்கள்? நீங்க நம்ம பேராசானைத்தான் கேட்கனும்.
எல்லாப் புகழும் நம் பேராசானுக்கே!
அதாவது, கலந்து ஆலோசிக்காமல் நினைத்ததைச் செய்து மாட்டிக்கொண்ட அரசன், அதற்காக, தன் உடன் இருப்பவர்களைக் குற்றம் சாட்டிக் கடிவான் என்றால், அவனுக்கு இருக்கும் செல்வமும், புகழும் குறைந்து இல்லாமலே போகும் என்கிறார் நம் பேராசான்.
“இனத்துஆற்றி எண்ணாத வேந்தன் சினத்துஆற்றிச்
சீறின் சிறுகும் திரு.” --- குறள் 568; அதிகாரம் – வெருவந்த செய்யாமை
இனத்துஆற்றி எண்ணாத வேந்தன் = (ஒரு செயலைச் செய்யும் முன்பு) தன்னுடன் இருப்பவர்களைக் கலந்து ஆலோசிக்காத, (அச் செயலைச் செய்து மாட்டிக் கொண்ட) அரசன்;
சினத்து ஆற்றிச் சீறின் = (அதற்காக மற்றவர்கள்தான் காரணம் என்று) மற்றவர்களைக் கோபம் கொண்டு கடிவானாயின்; திருச் சிறுகும் = (அவனது) செல்வமும் புகழும் குறையும்.
ஒரு செயலைச் செய்யும் முன்பு, தன்னுடன் இருப்பவர்களைக் கலந்து ஆலோசிக்காது, அச்செயலைச் செய்து மாட்டிக் கொண்ட அரசன்;
தன் நிலைக்கு மற்றவர்கள்தான் காரணம் என்று மற்றவர்களைக் கோபம் கொண்டு கடிவானாயின் அவனது செல்வமும் புகழும் குறையும்.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)
Comments