top of page
Search

இம்மைப் பிறப்பில் ... 1315, 1316, 1317, 23/06/2024

23/06/2024 (1205)

அன்பிற்கினியவர்களுக்கு:

அப்படி இப்படிப் பேசி ஒருவாறு சமாளித்து வைத்திருந்தான். அவளை  மேலும் குளிரூட்ட (ஐஸ் வைக்க) இந்தப் பிறவியில் உன்னைவிட்டு பிரியவே மாட்டேன் என்றான்.

 

அப்பொழுது, அடுத்த பிறவி என்ற ஒன்றிற்கு காத்திருக்கிறீர் போலும். அப்பொழுது பிரிந்து விடுவீரோ என்று கண்ணில் தண்ணிரை வரவழைத்துக் கொண்டாள்!

 

இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்

கண்நிறை நீர்கொண் டனள். – 1315; - புலவி நுணுக்கம்

 

இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனா = இந்தப் பிறப்பில் உன்னைவிட்டு நான் பிரியவேமாட்டேன் என்றேன்; கண்நிறை நீர் கொண்டனள் = அப்பொழுது, வரும் பிறவிகளில் பிரிந்து விடுவீரோ என்று சொல்லி அவள் கண்களில் கண்களையே மறைக்கும் விதமாகக் கண்ணீர்ப் பெருக்கினை வைத்துக் கொண்டாள்.

 

இந்தப் பிறப்பில் உன்னைவிட்டு நான் பிரியவேமாட்டேன் என்றேன். அப்பொழுது, வரும் பிறவிகளில் பிரிந்து விடுவீரோ என்று சொல்லி அவள் கண்களில் கண்களையே மறைக்கும் விதமாகக் கண்ணீர்ப் பெருக்கினை வைத்துக் கொண்டாள்.

 

அவன்: சரி, இன்று அவ்வளவுதான் என்று பாயை விரித்துத் தூங்க முயன்றேன். அருகினில் வந்தாள். தழுவத்தான் போகிறாள் என்று எண்ணினேன். அவள் என்னைப் பார்த்து என்ன யோசனை என்றாள்.

 

உன்னைத்தான் நினைத்தேன் என்றேன். அவ்வளவுதான், அப்பொழுது இதுவரை மறந்து இருந்தீரா என்றாள்!

 

உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப்

புல்லாள் புலத்தக் கனள். – 1316; - புலவி நுணுக்கம்

 

புல்லாள் = தழுவ வேண்டியவள்; உள்ளினேன் என்றேன் = உன்னத்தான் நினைக்கிறேன் என்றேன்; மற்று என் மறந்தீர் = அப்பொழுது இது வரை மறந்து இருந்தீரோ; என்று என்னைப் புல்லாள் புலத்தக் கனள் = என்று சொல்லி என்னைத் தழுவ வேண்டியவள் தள்ளிப் போனாள் மீண்டும் ஊடல் கொண்டு.

 

உன்னத்தான் நினைக்கிறேன் என்றேன். அப்பொழுது “இது வரை என்னை மறந்து இருந்தீரோ” என்று சொல்லி என்னைத் தழுவ வேண்டியவள் தள்ளிப் போனாள் மீண்டும் ஊடல் கொண்டு.

 

அவன் தன் மனத்திற்குள்: தும்மல் வருவது போல இருக்கின்றது. தும்மினால் என்ன சொல்வாளோ?

 

ஆ…அச்… தும்மல் வந்தே விட்டது.

 

வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்

யாருள்ளித் தும்மினீர் என்று. – 1317; - புலவி நுணுக்கம்

 

தும்மினேன் வழுத்தினாள் = தும்மினேன் வாழிய நீ என்று வாழ்த்தினாள்; ஆக அழித்து அழுதாள் = அதனை உடனே மாற்றி அழுதாள்; யார் உள்ளித் தும்மினீர் என்று = யாரை நினைத்துத் தும்மினீர் என்றாள்.

 

தும்மினேன் வாழிய நீ என்று வாழ்த்தினாள். அதனை உடனே மாற்றி அழுதாள். யாரை நினைத்துத் தும்மினீர் என்றாள்.

 

 

நாளைச் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.




Comments


Post: Blog2_Post
bottom of page