29/04/2021 (102)
இல்வாழ்வான் தான் ‘தல’
இல்லாளுடன் இணைந்து வாழ்வதே இல்வாழ்க்கை. இல்லறத்தின் இயல்புகளை உள்வாங்கி வாழ்பவன் மற்றெல்லாருக்கும் முதன்மை ஆகிறான்.
அது எப்படி? மற்றெல்லார் என்பவர்கள் யார் யார்?
நாம ஏற்கனவே பார்த்ததுதான். மனித வாழ்வின் படி நிலைகளை நான்காக பிரிக்கலாம். 1. கற்கும் பருவம்; 2. வாழும் பருவம்; 3. ஒய்வு எடுக்கும் பருவம் 4. விலகும் பருவம்.
வாழும் பருவம் தான் இல்வாழ்க்கை. இல்வாழ்வானுக்கு பதினொரு கடமைகள் இருக்கு. இல்வாழ்க்கை அதிகாரத்தின் முதல் மூன்று குறள்களில் (41,42 & 43) நம்ம வள்ளுவப்பெருந்தகை விரித்ததை ஏற்கனவே பார்த்தோம்.
ரொம்ப நாளாயிட்டுது. சுருக்கமா மீண்டும் பார்ப்போம்.
1. இயல்புடைய மூவருக்கு துணை (குறள் 41) – அதாவது ஏனைய மூன்று பருவத்தினருக்கும் (கற்கும், ஓய்வு எடுக்கும், விலகும்) துணையாக இருக்கனும்;
2. துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும் துணை (குறள் 42) – அதாவது வாழ்கையிலே கைவிடப்பட்டவர்கள், வறுமையிலே உழல்பவர்கள், ஆதரவின்றி இறந்தவர்கள் ஆகிய மூவருக்கும் ஆதரவாக இருத்தல்;
3. தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தான் (குறள் 43) - தென்திசையில் உறைவோர், வழிபடு கடவுள், விருந்தினர், சுற்றம், தான் ஆகிய ஐவரையும் கவனிக்கும் கடமையும் இருக்கு.
ஆக மொத்தம் பதினொரு வகையினர்(அவனையும் சேர்த்து) இல்வாழ்வானை நம்பி இருக்காங்க!
இல்லறம் இல்லை என்றால் உலகத்தில் ஒன்றும் நடக்காது. அப்போ, இல்வாழ்வான்தான் ‘தல’.
அதை நம்ம வள்ளுவப் பெருந்தகை குறள் 47 ல் இப்படிச் சொல்கிறார்:
“இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் முயல்வாருள் எல்லாம் தலை.” --- குறள் 47; அதிகாரம் - இல்வாழ்க்கை
இயல்பினான் = இயல்புகளொடு; இல்வாழ்க்கை = இல்லாளொடு இணைந்து; வாழ்பவன் என்பான் = இல்லறத்தில் இருப்பவர்கள்; முயல்வாருள் எல்லாம் = அவர் அவர் தன்மைக்கு ஏற்றவாறு முயன்று கொண்டு இருப்பவர்களுள் எல்லாம்; தலை = தலைவனாகிறான் (தல)
இல்வாழ்வில் நுழைபவர்களையும், பயணிப்பவர்களையும் வாழ்த்துவோம்.
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன்.
உங்கள் அன்பு மதிவாணன்
Comments