31/12/2022 (667)
சிறந்த நிர்வாகம் அறத்திற்கு அடிப்படை என்றார் குறள் 543ல். , சமுதாய முன்னேற்றத்தை அரவணைத்துச் செல்லும் தலைமையின் கீழ் இந்த உலகமே செல்லும் என்றார் குறள் 544ல். அடுத்து தொடர்கிறார்.
தலைமை, இயற்கையின் இயல்புகளை அறிந்து நிர்வாகம் செய்ய நல்ல மழையும் அதனால் வரும் நல்ல பயனும் நிலைக்கும் என்கிறார் நம் பேராசான்.
“இயல்புளிக் கோல் ஓச்சும் மன்னவன் நாட்ட
பெயலும் விளையுளும் தொக்கு.” --- குறள் 545; அதிகாரம் – செங்கோன்மை
இயல்புளி = விதிப்படி, இயற்கையின் இயல்புகளை வரம்பாக கொண்டு; கோல் ஓச்சும் மன்னவன் நாட்ட = நிர்வாகம் செய்யும் தலைமை செயல்பட; பெயலும் = நல்ல மழையும்; விளையுளும் தொக்கு = அதனால் வரும் விளைச்சல் உள்ளிட்டப் பயன்களும் எளிதாக வந்து அடையும்; தொக்கு = எளிது.
இயற்கையின் இயல்புகளை வரம்பாக கொண்டு, நிர்வாகம் செய்யும் தலைமை செயல்பட, நல்ல மழையும் அதனால் வரும் விளைச்சல் உள்ளிட்டப் பயன்களும் எளிதாக வந்து அடையும்
இயற்கையின் சாரம் எது என்றால் மழைதான். மழையில்லை என்றால் எந்த உயிர்களும் இல்லை. மழையானது எல்லாவற்றையும் சரி செய்யக்கூடியது.
வான் நோக்கி வாழும் உலகு என்றார் குறள் 542ல். தேவையான மழை பெய்ய உலகம் சிறக்கும். அதற்கு செய்ய வேண்டியது எல்லாம் இயற்கையின் இயல்புகளோடு ஒத்து நம் செயல் முறைகளை அமைத்துக் கொள்வது.
அதாவது environmental friendly என்கிறார்களே அதுதான் முக்கியம்.
அதாவது, இன்றைய ஐக்கிய நாடுகளின் கூட்டமைப்பு வலியுறுத்தும் ESG யை நம் பேராசான் எப்படி வரிசைப் படுத்தியுள்ளார் என்பது நம்மை வியப்பின் உச்சிக்கே கொண்டு செல்கிறது.
எனக்கு என்னமோ நமது இலக்கியங்களையெல்லாம் மேலை நாட்டார் ஆழங்கால் பட்டு பயில்கிறார்கள் அல்லது ஆராய்கிறார்கள் என்றே தோன்றுகிறது.
இல்லையென்றால் அவர்கள் reinvent செய்கிறார்கள். அதாவது, அவர்களே முனைந்து மீண்டும் கண்டுபிடிக்கிறார்கள்.
நமது இலக்கியங்களைத் தோண்டத் தோண்ட புதையல் போல புது, புதுக் கருத்துகள் புலப்படுகின்றன.
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன்.
உங்கள் அன்பு மதிவாணன்
Comments