04/04/2024 (1125)
அன்பிற்கினியவர்களுக்கு:
கருணையை யாரிடம் எதிர்பார்ப்பது என்று உனக்குத் தெரியவில்லை. வட்டிக் கடைக்காரனிடமும், கசாப்புக் கடைக்காரனிடமும் கருணையை எதிர்பார்த்தல் வீண் என்று சொல்லியிருக்கிறார்கள் பெரியவர்கள்.
அந்த வரிசையில் அவரையும் சேர்க்க வேண்டியதுதான்.
என் நெஞ்சே, அவரை எண்ணி எண்ணி நீ மாய்ந்து போகிறாய். பயன் ஏதும் உண்டோ? நம்மை இந்தத் துன்பம் தரும் நோயில் தள்ளியவரே அவர்தானே! அவரிடம் கருணையை எதிர்பார்ப்பது வீண்.
இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல்
பைதல்நோய் செய்தார்கண் இல். – 1243; - நெஞ்சொடு கிளத்தல்
பைதல் = துன்பம்;
நெஞ்சே இருந்து உள்ளி பரிதல் என் = என் நெஞ்சே, அவரை எண்ணி எண்ணி நீ மாய்ந்து போகிறாய். பயன் ஏதும் உண்டோ?; பைதல் நோய் செய்தார் கண் பரிந்து உள்ளல் இல் = நம்மை இந்தத் துன்பம் தரும் நோயில் தள்ளியவரே அவர்தானே! அவரிடம் கருணையை எதிர்பார்ப்பது வீண்.
என் நெஞ்சே, அவரை எண்ணி எண்ணி நீ மாய்ந்து போகிறாய். பயன் ஏதும் உண்டோ? நம்மை இந்தத் துன்பம் தரும் நோயில் தள்ளியவரே அவர்தானே! அவரிடம் கருணையை எதிர்பார்ப்பது வீண்.
அவளின் மனத்துடன் பேசுவது மேலும் தொடர்கிறது.
கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத்
தின்னும் அவர்க்காணல் உற்று. – 1244; - நெஞ்சொடு கிளத்தல்
தின்னும் = கொல்லும்; கொள = கொண்டு; சேறி = செல்வாய்;
நெஞ்சே கண்ணும் கொளச் சேறி = என் நெஞ்சே, நீ அவரிடம் போகத் துடிக்கிறாய். அப்படி நீ செல்ல வேண்டும் என்று நினைத்தால் இந்தக் கண்களையும் உடன் அழைத்துச் செல்; இவை அவர் காணல் உற்று என்னைத் தின்னும் = இவை, அவரைக் காண வேண்டும் என்று என்னை நச்சரித்துக் கொல்கின்றன.
என் நெஞ்சே, நீ அவரிடம் போகத் துடிக்கிறாய். அப்படி நீ செல்ல வேண்டும் என்று நினைத்தால் இந்தக் கண்களையும் உடன் அழைத்துச் செல். இவை, அவரைக் காண வேண்டும் என்று என்னை நச்சரித்துக் கொல்கின்றன.
நாளைத் தொடர்வோம். நன்றியுடன், உங்கள் மதிவாணன்.
Comments