18/06/2022 (477)
‘அன்பின் விழையார்’, ‘பண்பில் மகளிர்’, ‘பொருட் பெண்டிர்’, ‘பொருட்பொருளார்’, ‘பொதுநலத்தார்’, ‘தகைசெருக்கிப் பாரிப்பார்’, ‘நெஞ்சில் பிற பேணிப் புணர்பவர்’ ‘மாய மகளிர்’, ‘வரைவிலா மாணிழையார்’ என்றெல்லாம் அழைத்தவர் இறுதியாக ரொம்ப சுலபமாக கவனம் வைத்துக் கொள்ள ஏதுவாக ‘இருமனப் பெண்டிர்’ என்று சொல்கிறார்.
அதாவது, அவர்கள் உன்னோடு இருப்பது போல இருக்கும், ஆனால், அவர்களின் மனம் உன்னிடம் ஒன்றாமல் வேறு எங்கோ இருக்கும் என்கிறார். ஆகையால் அவர்கள் இருமனப் பெண்டிர்.
அவர்களைப் போலவே ஒருவனை பாதிப்பது கள் மற்றும் கவறு என்கிறார். கள் என்றால் நமக்குத் தெரியும் போதை தரும் மது வகைகள். கவறு என்றால் தாயக் கட்டை, சூதாடப் பயன்படும் பொருள். சூதாடுவதற்கு ஆகி வந்துள்ளது.
மது, மாது, சூது இம்மூன்றில் எது ஒன்றுக்கு அடிமையானாலும் அவர்களிடமிருந்து செல்வம் நீங்கிவிடுமாம்.
“இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்
திருநீக்கப் பட்டார் தொடர்பு.” --- குறள் 920; அதிகாரம் – வரைவின் மகளிர்.
திரு நீக்கப் பட்டார் தொடர்பு = செல்வம், வளமை என்பது அவர்களுக்கு இல்லை என்று விதித்திருப்பவர்கள் விரும்பித் தொடர்பு வைத்திருப்பது; இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும் = வரைவின் மகளிரும், மதுவும், சூதும்.
அதாவது, மது, மாது, சூதின் மேல் மனம் வைத்தவர்களிடம் செல்வம் தங்காது. வறுமையே மிஞ்சும் என்பது பொருள்.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)
コメント