top of page
Search

இருள்நீங்கி இன்பம் பயக்கும் ... 352,

03/02/2024 (1064)

அன்பிற்கினியவர்களுக்கு:

ஒரு கருதுகோளை (hypothesis) ஆராயும் எந்த ஓர் ஆராய்ச்சியின் (Research) முடிவிலும் ஒரு தெளிவு (thesis) பிறக்கும். அஃதாவது, அந்தக் கருதுகோள் உண்மை என்றும் கண்டறியலாம். இல்லை, இந்தக் கருதுகோள் தவறு என்றும் நிருபணம் ஆகலாம். அந்தத் தெளிவு, ஆராய்ச்சியை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும்.

 

கருதுகோள் – கோட்பாடு – எதிர் கோட்பாடு – புதிய கோட்பாடு (Hypothesis – Thesis – Antithesis – Synthesis) இவற்றைக் குறித்து நாம் முன்பு ஒரு முறை சிந்தித்துள்ளோம். மேலும் அவை தொடர்பான பலவற்றையும் சிந்தித்தோம். காண்க 29/04/2023.

 

இஃது ஏதோ அறிவியல் உலகத்தில் மட்டுமல்ல நம் வாழ்வியலிலும் அவ்வாறே. உறவுகளில் காட்சி பிழை எழலாம்; கருத்துப் பிழை கலங்கடிக்கலாம். அப்போதெல்லாம், பொறுமையாகச் சிந்தித்து உண்மை எது என்று கண்டறிந்தும், உலக வழக்கு எவ்வாறு என்று பொறுத்திப் பார்த்தும் தொடர்ந்தால் தெளிவு பிறக்கும்.

 

சரி, ஓய்வெடுக்கும் பருவத்திற்குள் நுழைந்தாகிவிட்டது. இப்போது, நாம் ஆராய வேண்டியது, அசை போட வேண்டியது என்று நிறைய இருக்கும். குறிப்பாக அவை அனைத்தும் மன அமைதியை நோக்கியவையே.

 

ஆராய்ச்சிகளே இருளை நீக்கத்தான். இருள் நீங்க இன்பம் பிறக்கும்; மயக்கம் தெளியும்; தெளிவு பிறக்கும்; உண்மையான காட்சி கிடைக்கும்.

 

சரி, நாம் குறளுக்கு வருவோம்.

 

இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி

மாசறு காட்சி யவர்க்கு. – 352; - மெய்யுணர்தல்

 

மருள் நீங்கி மாசறு காட்சியவர்க்கு = மயக்கம் தெளிந்து உண்மையான உண்மையை அறிந்து கொள்பவர்க்கு; இருள் நீங்கி இன்பம் பயக்கும் = மனக் குழப்பங்களாகிய இருள் நீங்க அதுவே மன அமைதியைக் கொடுக்கும்.

 

மயக்கம் தெளிந்து உண்மையான உண்மையை அறிந்து கொள்பவர்க்கு, மனக் குழப்பங்களாகிய இருள் நீங்க அதுவே மன அமைதியைக் கொடுக்கும்.

 

உண்மையான உண்மையை அறிந்து கொள்ளுதல் எதற்குப் பயன்படும்? அவாவினை அறுக்க பயன்படும். அஃதாவது, ஞானத்தின் உயரிய நிலை என்று ஏற்கெனவே சிந்தித்தோம். காண்க 20/01/2024, 21/01/2024.

 

நாம் மெய்யுணர்தலைத் தொடர்வோம்.

 

ஐயம் என்பது இதுவோ, அதுவோ என்று குழம்பி முடிவெடுக்க முடியாமல் இருக்கும் நிலை. இந்தப் பூவுலகில் பலவேறு கோட்பாடுகள் இருக்கின்றன. கடவுள் உண்டென்பாரும் உளர்; இல்லயென்பாரும் உளர். அனைத்து மதப்பிரிவினரும், எம்முடைய மதம்தான் அமைதிக்கு வழி வகுக்கும் என்பர். 

 

வானுலகம் என்ற ஒன்று உண்டென்பர். ஆங்கே போய் சேர்வதுதான் வீடென்பர். மறுபிறப்பு உண்டென்பர்; அப்படி ஒன்று இல்லவே இல்லை என்பர். இந்த வையகத்தில், இவ்வாறாகப் பல கோட்பாடுகள் நம்மைப் போட்டுக் குழப்பும்.

 

இருப்பினும், சிந்தித்துப் பார்த்தால், “எல்லாம் ஒன்றே” என்று திருமூலப் பெருமான் சொன்ன கருத்தின் உண்மைப் பொருள் விளங்கும். “நான் யார்?” என்று ஆராயச் சொன்ன ரமண மகரிஷியின் கருத்தும்,  “உன்னையே நீ அறிவாய்” என்று சொன்ன சாக்ரடீஸ் பெருமானாரின் கருத்தும் இயைந்தே செல்லும்.

 

“நமக்குள்ளே எல்லாம்” என்பது தெளிவாகும். இந்த உண்மை விளங்கினால், வானுலகம் என்பது நமக்கு அருகில் உள்ளதுதான் என்ற உண்மையான உண்மை பிறக்கும். இதைத்தான் அடுத்த குறளில் தெளிவுபடுத்துகிறார் நம் பேராசான்.

 

ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்

வானம் நணிய துடைத்து. – 353; மெய்யுணர்தல்

 

ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு = ஐயம் நீங்கி “நமக்குள்ளே எல்லாம் உள” என்ற தெளிந்தார்க்கு; வையத்தின் வானம் நணியது உடைத்து = இந்தப் பூவுலகம் மட்டுமல்ல வானுலகம் என்கிறார்களே அதுவும்கூட நமக்கு அருகில் உள்ளதுதான்.

 

ஐயம் நீங்கி “நமக்குள்ளே எல்லாம் உள” என்று தெளிந்தார்க்கு இந்தப் பூவுலகம் மட்டுமல்ல வானுலகம் என்கிறார்களே அதுவும்கூட நமக்கு அருகில் உள்ளதுதான்.

 

மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.




Comments


Post: Blog2_Post
bottom of page