04/02/2022 (344)
உரையாடல் தொடர்கிறது …
இரவு இரண்டு வகை. மானம் தீரா இரவு, மானம் தீரும் இரவு. முதல் வகை இரவு, இரவே அல்ல என்று சொன்ன முதியவர் மேலும் தொடர்ந்தார்.
தன் முனைப்பினாலே எல்லாரும் எல்லாமும் சிலபோது அடையமுடியாது. பல காரணங்கள் இருக்கலாம். அவர்கள் உயிரை விட முடியாது. நாமும் தள்ளிவிட முடியாது.
படைக்கப்பட்ட பொருள் அனைத்திற்கும் காலாவதி நாள் (expiry date) என்ற ஒன்று இருப்பதைப் போல, ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு இறுதி நாள் உறுதியாக இருக்கும். அவர்கள் உயிர்வாழ்ந்தே தீர வேண்டியது, காலத்தின் கட்டாயம். அதற்கு காரணமும் இருக்கும். அவர்களையும் அணைத்துச் செல்வதுதான் இல்லறத்தானின் வேலை. அந்த பக்குவம் மற்றவர்களுக்கு வரவேண்டும். அது ஒரு சுமையாக இருக்கிறதே என்று நம்மை நாமே நொந்து கொள்வது தேவையில்லை.
இடையிடையே, ம்ம் கொட்டுவதைத் தவிர எனக்கு பேச நா எழவில்லை.
தம்பி, என்ன மௌனமாகிட்டீங்க? இரு வேறு உலகத்து இயற்கை. நீங்க தொடர்ந்து எழுதுங்க என்று சொல்லிவிட்டு மறைந்துவிட்டார் அந்தப் பெரியவர்.
திடுக்கிட்டு எழுந்தேன். இது ஒரு கணவு என்பது உங்களுக்கு இப்போது சொல்லத் தேவையில்லை! நாம குறளுக்கு வருவோம்.
நல்குரவிற்கு அடுத்த அதிகாரம் இரவு. இதை ‘மானந் தீரா இரவு’ என்கிறார் பரிமேலழகப் பெருமான்.
இரந்து பெறுவது ஒரு இழிவானச் செயல்தான். அதனால் பழி வரத்தான் செய்யும். அவசியத்திற்கு இரக்க வேண்டுமா? இவர்கள் கொடுப்பார்கள் என்று தெரிந்தால் கேளுங்க. அவர்கள் மறுத்துவிட்டால் அப்போது, அந்தப் பழி உங்களுக்கு வராது. அது கொடுக்க மறுத்தவர்களையேச்சாரும் என்கிறார் நம் பேராசான்.
“இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின்
அவர்பழி தம்பழி அன்று.” --- குறள் 1051; அதிகாரம் - இரவு
கரப்பு = மறைத்தல், மறுத்தல்; இரத்தக்கார்க் காணின் இரக்க = வறுமையில் உள்ளோர், இவர்கள் நமக்கு உதவக்கூடும் என்று ஒருவரைக் கண்டால் இரக்க; கரப்பின் = அவர்கள் மறுத்துவிட்டால், தன்னிடம் உள்ளவற்றை மறைத்து விட்டால்; அவர்பழி தம்பழி அன்று =இரத்தலால் வரும் பழி அவர்களையேச் சாரும், இரப்பவர்களைச் சாராது.
சரியான வழி காட்டுதலில், நம் பேராசானைப் போல ஒருவர் இல்லை.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)
Comments