03/02/2022 (343)
நேற்று தனிமையை நாடி ஒரிடத்தில் அமரந்திருந்தேன். அப்போது தம்பி என்று ஒரு குரல். திரும்பிப் பார்க்க ஒரு முதியவர். ஐயா என்ன வேண்டும் என்றேன். ஒன்றுமில்லை, நீங்கள் தானே குறள் குறிப்புகளை எழுதுவது என்றார்.
எனக்கு ஆச்சரியம். ஆம் ஐயா என்றேன். பரவாயில்லை, படிக்கலாம் என்றார். எனக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவியல்லை.
அவரே தொடர்ந்தார். வறுமையைக் குறித்தும் அவர்களுக்குத் தேவையான தன்முனைப்பு குறித்தும் எழுதி இருந்தீர்கள். சிந்திக்க வேண்டியதுதான், செயல் படுத்தவும் வேண்டும். சந்தேகமில்லை. எல்லாம் செய்தும் வறுமை போகாத சிலர் இருப்பார்களா? என்றார்.
அதிலென்ன சந்தேகம் ஐயா. ஒருவருக்கு மூன்று வகையிலே துன்பங்கள் வரலாம். தன்னால், பிறரால், எந்த ஒரு காரணமும் இல்லாமலும் வரலாம் என்றேன்.
மிகச்சரி. இன்பத்திற்கும் அதே என்று ஏற்றுக் கொள்வீர்களா? என்றார்.
ம்ம்ம். அதுவும் சரிதான் என்றேன். சிலருக்கு (luck) அபரிமிதமான வாய்ப்புகள் வரத்தானே செய்கிறது. எனக்குத் தெரிந்துவிட்து. இந்தப் பெரியவர் சாதாரணமானவர் இல்லை என்று. என் வாயை கொஞ்சம் மூட வேண்டும் என்று நினைத்துக் கொண்டு சொல்லுங்கள் ஐயா என்றேன்.
அவரே தொடர்ந்தார். தம்பி, என்ன ஒருவர் செய்தாலும், சில சமயம் அவர்களின் வறுமை போகாது. அவர்கள் ‘போகூழி’ல் சிக்கியிருப்பார்கள். அவர்கள் யாசித்துத்தான் உண்ணவேண்டும் என்ற நிலையில் உழலுவார்கள். அதற்காக அவர்கள் மனம் வருந்திக் கொண்டு இருக்கும்.
கவனித்திருக்கலாம். யாசகம் கேட்போர்கள் பல வகை. அதில் சிலர் தன்பாட்டில் அமர்ந்திருப்பார்கள். குறிப்பிட்ட சிலரிடம் தான் கையை நீட்டுவார்கள். எல்லோரிடத்திலும் உதவி கேட்கமாட்டார்கள். மற்றபடி கொடுத்தாலும், கொடுக்காவிட்டாலும் மிகவும் அமைதியாகவே இருப்பார்கள்.
இரவு என்றால் யாசித்தல் என்று பொருள். அதுவும் இரு வகைப் படும். ஒன்று, மானம் போகா இரவு, மற்றொன்று, மானம் போகும் இரவு. இதில், மானம் போகா இரவு என்பது இரவு அல்ல. அது இரவாமையையேச் சாரும். கடவுளிடம் சிலர் வேண்டுகோள் வைப்பார்கள். நான் எல்லாம் செய்துவிட்டேன், இனி நீ செய்ய வேண்டியதைச் செய்யவில்லை என்றால் அது என் குற்றம் அல்ல. அது உன் குற்றம் என்று கடவுளைக் குற்றம்சாட்டி பேசுவார்கள். இருக்கு இல்லையா என்றார்.
ம்ம். சரி ஐயா.
(நீண்ட உரையாடல் என்பதால் நாளை தொடர்கிறேன்)
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)
Comentários