07/06/2024 (1189)
அன்பிற்கினியவர்களுக்கு:
உன் முயற்சியால் உருவாக்கிய கஞ்சு, வெறும் நீர் போல இருந்தாலும் இனிது என்றார் குறள் 1065 இல்.
ஈன்றவள் பசித்திருக்கிறாள், அவளுக்கு ஏதாவது உணவினை அளிக்க வேண்டும் என்று எண்ணிப் பாவச் செயல்களில் இறங்கிவிடாதே என்றார் குறள் 656 இல். காண்க 04/08/2022. மீள்பார்வைக்காக:
ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை. - 656; - வினைத்தூய்மை
எனக்கு உணவு இல்லையென்றால் பரவாயில்லை இதோ என்னையும் அண்டிப் பிழைக்கும் இந்த மாட்டிற்கும் வழியில்லை. அதற்கு ஏதேனும் நீராகாரம் கிடைக்குமா என்று இரப்பதுகூட இழிவு என்கிறார்.
ஆவிற்கு நீரென் றிரப்பினும் நாவிற்
கிரவின் இளிவந்த தில். – 1066; - இரவு அச்சம்
ஆவிற்கு நீர் என்று இரப்பினும் = இந்த மாட்டிற்காவது சிறிது நீராகாரம் தருவீர்களா என்று இரந்தாலும்கூட; இரவின் நாவிற்கு இளிவந்தது இல் = அந்த இரத்தலினால் வரும் இழிவும் உனக்கு ஓர் அளவில்லாததாக இருக்கும். அஃதாவது, நீ எள்ளி நகையாடப்படுவாய்.
இந்த மாட்டிற்காவது சிறிது நீராகாரம் தருவீர்களா என்று இரந்தாலும்கூட அந்த இரத்தலினால் வரும் இழிவும் உனக்கு ஓர் அளவில்லாததாக இருக்கும். அஃதாவது, நீ எள்ளி நகையாடப்படுவாய்.
நம்மாளு: ஆமாம், சரிதான். “அவரையே காப்பாத்திக்கத் தெரியலையாம்! வந்துட்டார் ஆட்டைக் காப்பாத்தறேன், மாட்டைக் காப்பாத்தறேன்னு. போய் ஆகிற வேலையைப் பாரும்” என்பார்கள்.
அஃதாவது, கொடுக்க மறுப்பவர்களிடம் கை ஏந்தாதே என்பதனைத்தான் திரும்பச் திரும்பச் சொல்கிறார். எக்காரணம் கொண்டும் இரக்கமில்லா அரக்கர்களின் வாயிலில் கை ஏந்தாதே என்கிறார்.
சரி, இல்லாத பொழுது பிறரிடம் கை ஏந்தலாமா என்ற கேள்விக்கு முன்பே பதில் அளித்துவிட்டார் குறள் 1053 இல். கரப்பில்லா நெஞ்சத்தினரிடம் சென்று இரப்பதும் ஓர் அழகு என்றார். காண்க 06/02/2022. மீள்பார்வைக்காக:
கரப்பிலா நெஞ்சிற் கடனறிவார் முன்னின்
றிரப்புமோர் ஏஎர் உடைத்து. - 1053; - இரவு
இரவு அச்சம் என்பது இரக்கம் இல்லாதவர்களின் இறுகிய மனத்தால் வருவது.
சுற்றிச் சுழன்றடிக்கும் கடல். அதில் ஒருவன் பயணம் செய்ய முயல்கிறான். அவனிடம் இத்துப்போன மரத்தினைக் கொண்டு ஒரு படகு. கிழிந்த துணிக்குத் தையல் போட்டுப் போட்டுத் தையல்களைத் தவிர துணி என்று ஒன்று இருந்ததாக ஓர் அடையாளம் இல்லாது இருக்குமே அதுபோல அந்தப் படகு!
கரை சேர வழியில்லாமல் தத்தளிக்கிறான், தன் கைகளையே துடுப்பாகப் பயன்படுத்துகிறான். போகும் பாதையில் ஒரு பாறை. அதில் மோதி அந்த இத்துப் போன படகு தூள் தூள் ஆகிறது.
இந்தக் காட்சியை அப்படியே உருவகப் படுத்துகிறார். பயணம் செய்பவன்தான் ஏதுமில்லாதவன் என்று சொல்லத் தேவையில்லை. அந்தப் பாறைதான் உள்ளதை ஒளித்து வைத்துக் கொண்டு கல்லாக இருக்கிறார்களே அது போன்றவர்கள் என்கிறார்.
இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும்
பார்தாக்கப் பக்கு விடும். – 1068; - இரவு அச்சம்
பார் = பாறை; பக்கு = பிளவு; ஏமாப்பு = பாதுகாப்பு;
இரவு என்னும் ஏமாப்பு இல் தோணி = ஏதுமில்லாதவன் தன் வாழ்க்கை என்னும் கடலைக் கடக்க இரவு என்னும் இத்துப்போன படகைக் கொண்டு பயணிக்க முயல்கிறான்; கரவு என்னும் பார் தாக்கப் பக்கு விடும் = அந்தப் படகு, இளகிய மனம் இல்லாத கல் நெஞ்சக்காரர்களுடன் மோத சுக்கு நூறாகிறது.
ஏதுமில்லாதவன் தன் வாழ்க்கை என்னும் கடலைக் கடக்க இரவு என்னும் இத்துப்போன படகைக் கொண்டு பயணிக்க முயல்கிறான். அந்தப் படகு, இளகிய மனம் இல்லாத கல் நெஞ்சக்காரர்களுடன் மோத சுக்கு நூறாகிறது.
இதனைப் பார்த்து நொறுங்கிப் போகிறார் நம் பேராசான். தம்பி உன்னிடம் ஒரு பிச்சைக் கேட்கிறேன் என்கிறார்!
யாரைப் பார்த்து? அந்த ஏதுமில்லாதவனைப் பார்த்து!
என்ன பிச்சைக் கேட்கிறார்? நீ இரந்துதான் ஆகவேண்டும் என்றால் கல் நெஞ்சக்காரர்களிடம் மண்டியிடாதே என்று பிச்சைக் கேட்கிறார்.
இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின்
கரப்பார் இரவன்மின் என்று. – 1067; - இரவு அச்சம்
இரப்பின் கரப்பார் இரவன்மின் என்று = கை ஏந்தும் நிலை ஏற்பட்டால், தம்பி, கல் நெஞ்சக்காரர்களிடம் மட்டும் கை ஏந்தாதே; இரப்பாரை எல்லாம் இரப்பன் = இதனை உன்னிடம் மட்டுமில்லை தம்பி, உன்னைப் போன்று வேறு வழியில்லாமல் கை ஏந்தும் அனைவரையும் பார்த்துக் கேட்டுக் கொள்கிறேன்.
கை ஏந்தும் நிலை ஏற்பட்டால், தம்பி, கல் நெஞ்சக்காரர்களிடம் மட்டும் கை ஏந்தாதே. இதனை உன்னிடம் மட்டுமில்லை தம்பி, உன்னைப் போன்று வேறு வழியில்லாமல் கை ஏந்தும் அனைவரையும் பார்த்துக் கேட்டுக் கொள்கிறேன்.
இது போன்று நம் பேராசான் நொந்து சொல்லும் குறள் வேறு ஏதுமில்லை!
நாளைத் தொடர்வோம். நன்றியுடன், உங்கள் மதிவாணன்.
Comments