27/05/2022 (455)
துறவறவியலில் கள்ளாமை என்று ஒரு அதிகாரம் (29ஆவது). கள்ளாமை என்றால் பிறர் பொருளின் மேல் ஆசைப்பட்டு அதை அடைய முயலாமை. களவு செய்யாமை. இதை ஏன் துறவறவியலில் வைத்தார் என்பதைப் பிறகு பார்க்கலாம் என்று ஆசிரியர் சொல்லி விட்டார்.
கள்ளாமையில் மூன்றாவது பாடல் என்ன சொல்கிறது என்றால், களவினால் சேர்ந்தவையினால் பயன் இருப்பதுபோல் தோன்றுமாம். ஆனால், உண்மையில் எல்லை இல்லாத துன்பத்தைத் தந்து அழிக்குமாம்.
“களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து
ஆவது போலக் கெடும்.” --- குறள் 283; அதிகாரம் – கள்ளாமை
களவினால் ஆகிய ஆக்கம் = களவினால் அடைந்தவை;
ஆவது போல அளவு இறந்து கெடும் = பயன் இருப்பது போலத் தோன்றி எல்லையைக் கடந்து கெடும்.
இந்தப் பாடலில் கவனிக்க வேண்டியச் சொல் “அளவிறந்து”. அதாவது, அது ‘அளவு + இறந்து’ என்று பிரியும். அதன் பொருள் ‘அளவு கடந்து’ என்பதாகும்.
வாரணம் ஆயிரம் (2008) என்று ஒரு திரைப் படம். அதில் கவிஞர் தாமரை அவர்களின் பாடல்:
“அடியே கொல்லுதே; அழகோ அள்ளுதே
உலகம் சுருங்குதே; இருவரில் அடங்குதே
உன்னோடு நடக்கும் ஒவ்வொரு நொடியும்
அர்த்தங்கள் சேர்ந்திடுதே …” ஹாரிஸ் ஜெயராஜ் இசையில்
இந்தப் பாடலில் ‘அடியே கொல்லுதே’ என்றால் கொல்வது இல்லை. அளவு கடந்த இன்பத்தைக் குறிக்க கவித்துவமாகச் சொல்வது.
ம்ம்… சரி, சரி நாம குறளுக்கு வருவோம்.
அது போல, ஒருவனுக்கு அளவு கடந்த துணைகள் (support) இருப்பினும் தப்பிக்க முடியாதாம்! எப்போது என்றால் பல சிறப்புகளைத் தன்னகத்தேக் கொண்ட பெரியார்கள் மாறுபட்டால் என்கிறார் நம் வள்ளுவப் பெருந்தகை; முடிவுரையாகப் பெரியாரைப் பிழையாமை அதிகாரத்தில்!
“இறந்தமைந்த சார்புடையார் ஆயினும் உய்யார்
சிறந்தமைந்த சீரார் செறின்.” --- குறள் 900; அதிகாரம் – பெரியாரைப் பிழையாமை
‘இறந்து அமைந்த’ என்பதை ‘அளவு இறந்து அமைந்த’ என்று அமைத்துப் பொருள் காண வேண்டும்.
இறந்து அமைந்த சார்பு உடையார் ஆயினும் உய்யார்= அளவு கடந்த துணைகள் பல உடையவர்கள் ஆனாலும் பிழைக்க மாட்டார்கள்; சிறந்து அமைந்த சீரார் செறின் = பல சிறப்புகள் அமைந்த பெரியார்கள் மாறுபட்டால்.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com )
Comments