12/05/2022 (440)
உட்பகையில் இரண்டு வகையிருக்காம். ஒன்று நமது நெருங்கிய சொந்தங்களில் தோன்றுவது. அதாவது நமது உள்வட்டம்; மற்றொன்று, வெளிவட்டத்தில் தோன்றுவது.
‘உடன் பிறந்தே கொல்லும் வியாதி’ என்பார்களே அதுபோல. இது முதல் தரமான அக்மார்க் (AGMARK) உட்பகை. மற்றவை எல்லாம் அடுத்த நிலைதான். நம் ஔவைப் பெருந்தகை மூதுரையில் இந்த வியாதியைச் சொல்லி அதற்கு ஒரு மருந்தும் குறிப்பாகச் சொல்லியிருக்கிறார். அம் மருந்தைக் கண்டுபிடிக்கும் வேலையை உங்களிடமே விட்டு விடுகிறேன்.
“உடன்பிறந்தார் சுற்றத்தார் என்று இருக்க வேண்டா
உடன் பிறந்தே கொல்லும் வியாதி – உடன்பிறவா
மாமலையில் உள்ளமருந்தே பிணிதீர்க்கும்
அம்மருந்து போல்வாரும் உண்டு.” --- மூதுரை 20; ஔவைப் பெருந்தகை
உள்வட்டத்தில் இருப்பவர்களை விலக்கவும் முடியாது, வெறுக்கவும் முடியாது. சரி இது நிற்க.
இறல், விறல், உறல் இப்படி மூன்று சொற்கள் இருக்காம் தமிழில். இதைப் பார்த்துட்டு நாம் குறளுக்குள் போவோம்.
‘இவறல்’ என்றொரு சொல்லைப் பார்த்திருக்கோம். ‘இவறல்’ என்றால் தேவைக்கு உதவாதது, கஞ்சத்தனம். காண்க 07/04/2021 (80).
“செயற்பால செய்யாது இவறியான் செல்வம்
உயற்பாலது இன்றிக் கெடும்.” --- குறள் 437; அதிகாரம் – குற்றங்கடிதல்
செய்ய வேண்டியவைகளைச் செய்யாத கஞ்சனின் பொருள், துன்பத்திலிருந்து விடுவிக்கும் சிறந்த பயன் இன்றி அழியும்.
இறல் என்றால் இறுதி என்று பொருளாம். அதாவது அழிவு.
விறல் என்றால் வெற்றியாம்.
“இறல்ஈனும் எண்ணாது வெஃகின் விறல் ஈனும்
வேண்டாமை என்னும் செருக்கு.” --- குறள் 180; அதிகாரம் – வெஃகாமை
எண்ணாது வெஃகின் = வரப்போகும் விளைவை எண்ணாமல் பிறர் பொருளைக் கவர்ந்து விடுவோம்(ஆட்டையை போட்டுடலாம்) என்று முனைபவனுக்கு; இறல்ஈனும் = அழிவுதான் கிடைக்கும்; வேண்டாமை என்னும் செருக்கு = அது அவன் பொருள், நமக்குண்டானது நமக்கு கிடைக்கும் என்று கெத்தாக இருப்பவனுக்கு; விறல் ஈனும் = வெற்றியே கிடைக்கும்.
உறல் என்றால் உறவு என்று பொருளாம். உறலில் உட்பகை வந்தால் …
நம் பேராசான் என்ன சொல்கிறார் என்று நாளை பார்ப்போம்.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com )
Comments