05/07/2023 (853)
அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:
“வேலைகளல்ல வேள்விகளே” என்றத் தலைப்பில் கவிஞர் தாராபாரதி அவர்களின் கவிதையில் வரும் வரிகள்:
“... வெறுங்கை என்பது மூடத்தனம் - உன் விரல்கள் பத்தும் மூலதனம்!
கருங்கல் பாறையும் நொறுங்கிவிழும் - உன் கைகளில் பூமி சுழன்றுவரும்!...”
இந்தக் கவிதையை நாம் முன்பு ஒருமுறை பார்த்துள்ளோம். கவிஞர் தாராபாரதி குறித்த குறைப்பைக் காண காண்க 24/01/2022 (333).
அந்தக் கவிதையில் அவர் மேலும் சொல்லுவார்:
“... மண்புழு அல்ல மானிடனே - நீ
மாவலி காட்டு வானிடமே!
விண்ணிலும் மண்ணிலும் விளைவுகளே-இவை
வேலை களல்ல வேள்விகளே!” --- கவிஞர் தாராபாரதி
பொருள் இல்லை என்றால் எல்லாருமே ஏளனமாகத்தான் பேசுவார்கள். எங்கெல்லாம் நாம் அவமானப் படுத்தப்படுகின்றோமோ அங்கேதான் நாம் வளர்வதற்கான விதை நடப்படுகிறது.
பொருள் சேர்ந்தால் எல்லாரும் பாராட்டுவார்கள் - ஒரு பக்கம் பொறாமை இருந்தாலும்கூட!
“இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பு.” --- குறள் 752; அதிகாரம் – பொருள் செயல்வகை
சொல்வது நம் வள்ளுவர் பெருமான்!
இல்லாரை எல்லாரும் எள்ளுவர் = ஏதேதோ இருந்தாலும்கூட செல்வம் இல்லை என்றால் எல்லாரும் ஒரு மாதிரியாகத்தான் பேசுவார்கள்; செல்வரை எல்லாரும் செய்வர் சிறப்பு = எது இல்லையென்றாலும், பணம் மட்டும் இருந்துவிட்டால் அவனுக்கு எல்லாரும் மரியாதை கொடுப்பாங்க.
ஏதேதோ இருந்தாலும்கூட செல்வம் இல்லை என்றால் எல்லாரும் ஒரு மாதிரியாகத்தான் பேசுவார்கள்; எது இல்லையென்றாலும், பணம் மட்டும் இருந்துவிட்டால் அவனுக்கு எல்லாரும் மரியாதை கொடுப்பாங்க.
இதுதான் உலக இயற்கை!
இது பணத்தின் முக்கியத்துவத்தையும், அதைச் செய்ய வேண்டிய கடமையையும் எடுத்துக்கூறச் சொன்னது.
ஆகையினால் செய்க பொருளை!
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
コメント