26/02/2021 (40)
நன்றி, மகிழ்ச்சி, வாழ்த்துகள்.
பல் வேறு வகையிலே கருத்துக்களை வழங்கிய அனைவருக்கும் நன்றிகள் பல.
கற்கும் பருவம், வாழும் பருவம், ஒய்வு எடுக்கும்/ தயார் படுத்திக்கொள்ளும் பருவம், விலகும் பருவம் ஆகிய நான்கு பெரும் பிரிவுகளை, பெரும்பான்மை கருதியும் அதனிடையே உள்ள தொடர்பினைக் கருதியும் வள்ளுவப்பெருந்தகை, இல்லறம், துறவறம் என்று இரண்டாக பிரித்து திருக்குறளை அமைத்துள்ளார்.
அன்பு தொடர்புடையரிடம் ஏற்படுவது, அருள் எல்லோரிடமும் ஏற்படும் பரிவு என்பது நமக்கு தெரிந்ததே. ‘கற்பதனால் ஆய பயன் …’ என்ற குறள் விளக்கத்தை நினைவில் கொள்ளல் நன்று.
‘அன்புடைமை’ என்கிற அதிகாரத்தை இல்லறவியலிலும், ‘அருளுடைமை’ என்கிற அதிகராத்தை துறவறவியலிலும் அமைத்துள்ள பாங்கு நோக்கத்தக்கது.
நிற்க.
கற்கும், ஓய்வு எடுக்கும்/தயார் படுத்திக்கொள்ளும், மற்றும் விலகும் பருவத்தில் உள்ள அனைவருக்கும் யார் துணையாக இருப்பார்கள் என்றால் இல்வாழ்வில் ஈடுபட்டு ‘வாழும் பருவத்தில்’ உள்ளவர்கள் தான். இதை வள்ளுவப்பெருந்தகை தனது இல்லறவியலின் முதல் அதிகாரம் ‘இல்வாழ்க்கை’யின் முதல் குறளிலேயே இப்படிச் சொல்கிறார்:
“இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை” ---குறள் 41; அதிகாரம் - இல்வாழ்க்கை
இல்வாழ்வான் என்பான்= இல்லறத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள்; இயல்புடைய மூவர்க்கும் = ஏனைய மூன்று பருவத்தார்க்கும்; நல்லாற்றின் = (அவர்களின் அறத்துடன் கூடிய)நல் வழிக்கு; நின்ற துணை = நிலைத்து நிற்கின்ற துணை
அன்பின்பாற்பட்டு இல்லறத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள், தங்களுக்குத் தொடர்புடைய ஏனைய மூன்று பருவத்தார்க்கும் அவர்களின் அறத்துடன் கூடிய நல் வழிக்கு நிலைத்து நிற்கின்ற துணையாக இருக்க வேண்டும். அதுவே இல்வாழ்வோர்க்கு இன்பம் பயக்கும்.
நம்மாளு: ஐயா, அப்போ, துறவறத்தில் இருப்பவர்களுக்கு எது இன்பம் பயக்கும்?
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன்.
உங்கள் அன்பு மதிவாணன்.
Comments