26/03/2023 (752)
இடும்பை என்பது வாளானால் அதன் இலக்கு என்பது நமது அழிவு!
அந்த வாளை மொக்கையாக்குவதுதான் இடுக்கண் அழியாமை என்னும் பண்பு.
‘கையாறு’ என்றால் துன்பம், செயலறுகை என்று பொருள்.
அதாவது, செயல் அற்றுப் போவது. அதாவது, துன்பத்தைக்கண்டு உரைந்துப் (freeze) போவது. இது ஒரு முதிர்ந்த நிலை.
ஆனால், இடும்பைக்கே இடும்பை கொடுக்கும் நம்மாளு என்ன செய்வாராம் என்றால், என்ன துன்பம் இந்த வாழ்கையில் வந்தாலும் விட்டுக் கொடுக்கமாட்டாராம்!
அவருக்கு நம்ம பேராசான் ஏற்கனவே ‘அழிவிலான்’ என்ற ஒரு பட்டம் கொடுத்துள்ளார் குறள் 625ல்.
இப்போ, வாங்கிக்கங்க இன்னொரு பட்டம் என்று கொடுக்கிறார். அது என்னவென்றால் அதுதான் ‘மேலானவர்’ என்ற பட்டம்.
“இலக்கம் உடம்புஇடும்பைக்கு என்று கலக்கத்தைக்
கையாறாக் கொள்ளாதாம் மேல்” --- குறள் 627; அதிகாரம் – இடுக்கணழியாமை
இடும்பைக்கு இலக்கம் உடம்பு என்று= துன்பத்தின் இலக்கு நம்மைச் சாய்ப்பது என்று அறிந்து கொண்ட; மேல் = மேலானவர்கள்; கலக்கத்தைக் கையாறாக் கொள்ளாதாம் = தமக்கு வரும் துன்பத்தை துன்பமாக மதிக்கமாட்டார்களாம்.
துன்பத்தின் இலக்கு நம்மைச் சாய்ப்பது என்று அறிந்து கொண்ட மேலானவர்கள், தமக்கு வரும் துன்பத்தை துன்பமாக மதிக்கமாட்டார்களாம்.
எதிர்த்துப் போராடி வெற்றி காண்பர் என்பது குறிப்பெச்சம்.
‘உடம்பு’ என்ற சொல்லை வளர்ச்சியை, வெற்றியைக் குறிப்பதற்கு உருவகிக்கிறார்.
உடம்பு என்று உருவகித்தவர், அதைத் தாக்கவரும் இடும்பையை ‘வாள்’ என்று சொல்லாமல் விட்டுவிட்தால் இது ஏகதேச உருவகம் என்கிறார் என் ஆசிரியர்.
நாமே கண்டுபிடிக்கனுமாம்!
நம்மாளு: ஆகிற கதையா ஐயா இது? ஏதோ, நீங்க இருப்பதாலே பிழைக்கிறோம்.
ஆசிரியர் நடையைக் கட்டினார்.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள் முதலான: www.easythirukkural.com)
Comments