15/04/2024 (1136)
அன்பிற்கினியவர்களுக்கு:
காக்கா விடாம கத்திக்கிட்டே இருக்கு. இன்றைக்கு யாரோ விருந்தாளிங்க வரப்போறாங்க என்பாள் அம்மா. அன்றைக்கு எங்க ஆயா (பாட்டி) வருவாங்க. அவங்க வந்தாலே எங்களுக்கெல்லாம் கொண்டாட்டம்தான். அது எப்பவும் தீபாவளியை ஒட்டியே இருக்கும். வந்த உடன் ஆளுக்கு கொஞ்சம் காசு கிடைக்கும். அதை வைத்துக் கண்டதை வாங்கிக் கொண்டாட வேண்டியதுதான்.
அடுத்து, தீபாவளி பலகாரம் செய்ய ஆரம்பிச்சுடுவாங்க. தகர டின்களில் (Sheet metal biscuit tin) முறுக்கும், தட்டைகளும் நிரம்பும். பேசின் என்று ஒரு பாத்திரம், மிக அகலமான, ஆனால் தாம்பாளத் தட்டைவிட ஆழமான பாத்திரம் இருக்கும். அது பித்தளையில் இருக்கும். அதற்குத் தீபாவளிக்கு முன்புதான் கலாய் (ஈயம்) பூசி வைக்கப் பட்டிருக்கும். அதற்குள், பாம்பு அடங்குவது போல, பதுவிசாக அதிரசங்கள் அடங்கும்.
அதிரசமும் இரு வகையில் இருக்கும். ஒன்று சர்க்கரை அதிரசம், மற்றொன்று வெல்ல அதிரசம். வெல்ல அதிரசம் சாமி கும்பிட்ட பிறகுதான் சாப்பிட முடியும். அதனால், எனக்கு எப்பவுமே, சர்க்கரை அதிரசம்தான் பிடிக்கும். சுட்ட உடனே சாப்பிடலாம்!
(Basin என்றால் தண்ணீர் தங்கும் ஓர் அகலமான பள்ளம். அதனால்தான் அந்த வடிவப் பாத்திரங்களுக்குப் பேசின் என்றார்கள் போலும். Ex. Wash basin)
என்ன இன்றைக்குக் கதை வேற பாதையிலே போகுதேன்னு பார்க்கறீங்களா?
காக்கா கத்தப் போய், பாட்டி வந்தாற்போலவே எனக்கு மகிழ்ச்சி தொற்றிக் கொண்டால், அவளுக்கு?
மனத்திற்குள் பட்டாம் பூச்சுகள் பறக்கின்றன. அவன் இன்று வந்துவிடுவான் என்பது உறுதி என்று நினைக்கிறாள்.
தோழியே மிகவும் அழகாகத் தோன்றுகிறாள் அவளுக்கு! மணம் முடிக்கவில்லை. எந்தக் கவலையுமில்லாமல் சிலைபோல அப்படியே இருக்கிறாள்.
அவளிடம், “நீ இன்றைக்கு அளவிற்கு அதிகமாக நகைகளை அணிந்து கொண்டுள்ளாய் போலும். (அவளுக்கும் இயற்கை அழகு இருக்கும் என்பதனை ஒத்துக் கொள்ள முடியவில்லை அவளால்!).
இன்று அவர் வரத்தான் போகிறார். எப்படி அவரை இன்று நான் மறப்பேன்? அப்படி மறந்துவிட்டு இருந்தால், இதோ என் தோள்களில் உள்ள வளைகளை மிகவும் கடினப்பட்டு விழாமல் தடுத்து வைத்திருக்க முடியுமா? என் அழகை நானே குலைத்துக் கொள்ள விரும்புவேனா? என்று கேள்விக் கனைகளால் துளைக்கிறாள்.
நாம் பார்க்கப் போகும் குறளுக்கு வேண்டிய சொல்களை கவனித்துவிட்டு அவளைக் கவனிப்போம்.
இலங்கு என்றால் “தெளிவாக எடுத்துக் காட்டும்” என்று பொருள். காண்க 25/10/2021. மீள்பார்வைக்காக:
விலங்கொடு மக்க ளனையர் இலங்குநூல்
கற்றாரோ டேனை யவர். - 410; - கல்லாமை
இலங்கு நூல் = அறிவினைத் தெளிவாக்கும் நூல்
இழாய் என்றால் தன்னை அலங்காரப் பொருள்களால் இழைத்துக் கொண்டவள். இலங்கு இழாய் என்றால் தன்னை எடுப்பாகக் காட்டும் அணிகலன்களை அணிந்து இருப்பவள் என்று பொருள்.
காரிகை என்றால் அழகு, பெண்.
கலம் என்றால் அணிகலன்கள், நகைகள்.
இலங்கிழாய் இன்று மறப்பினென் தோள்மேல்
கலங்கழியும் காரிகை நீத்து. – 1262; - அவர்வயின் விதும்பல்
இலங்கு இழாய் = எடுப்பாகக் காட்டும் அணிகலன்களை அணிந்து இருப்பவளே; இன்று மறப்பின் = இன்று அவர் வருவதனை நான் மறந்துவிட்டால்; என் தோள் மேல் கலன் கழியும் = என் தோள்களில் உள்ள வளைகளை மிகவும் கடினப்பட்டு விழாமல் தடுத்து வைத்திருக்கிறேனே அது இயலாது; காரிகை நீத்து = மேலும் அவர் வரும் பொழுது என் அழகு குலைந்திருக்கும். ஆகையினால் அவர் வருவதனை நான் மறவேன்.
எடுப்பாகக் காட்டும் அணிகலன்களை அணிந்து இருப்பவளே, இன்று அவர் வருவதனை நான் மறந்துவிட்டால் என் தோள்களில் உள்ள வளைகளை மிகவும் கடினப்பட்டு விழாமல் தடுத்து வைத்திருக்கிறேனே அது இயலாது. மேலும் அவர் வரும் பொழுது என் அழகு குலைந்திருக்கும். ஆகையினால் அவர் வருவதனை நான் மறவேன்.
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் மதிவாணன்.
Comments