02/07/2021 (130)
இல்லையெனாது கொடுப்போம்
புத்திசாலிகள் இந்த காரியம் செய்யமாட்டார்கள் என்று சொல்லுவுமேயானால் பலரும் அந்த காரியத்தை பெரும்பாலும் செய்யமாட்டார்கள். அது போல, நம் வள்ளுவப்பெருந்தகை ஒரு குறளை அமைத்துள்ளார். அதாவது, நல்ல குடிப்பிறப்புக்கு சொந்தமானவன் இந்த காரியத்தை செய்யமாட்டான் என்கிறார். எந்த காரியத்தை? இதோ பார்ப்போம்.
ஒருத்தன் நம்மகிட்ட வந்து (பார்க்கும் போதே தெரியுது அவனுக்கு ஏதோ துன்பம்/கஷ்டம்/தேவை என்று) அவனின் துன்பத்தை வாய்விட்டு சொல்லி உதவி கேட்கிறான் (வாய் விட்டு கேட்பது என்பது இன்னொரு கொடுமை). அப்படி கேட்டவனுக்கு, என்னிடத்திலும் ஒன்றுமில்லையேப்பா என்று சொல்லாமலும், அப்படி சொன்னவனுக்கு தவறாமல் உதவுவதும் நல்ல குடிபிறப்பில் பிறந்தவனிடம் இருக்குமாம்.
“இலன்என்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலன்உடையான் கண்ணே உள.” --- குறள் 223; அதிகாரம் - ஈதல்
இலன்என்னும் எவ்வம் உரையாமை = என்னிடம் ஒன்றும் இல்லை என்று தன் துன்பத்தை சொல்லி இரப்பவரிடம் அதே கதைதான் இங்கேயும் என்று சொல்லாமை; ஈதல் = இரப்பவன் தன் துன்பத்தை சொன்ன மாத்திரத்தில் அவனுக்கு வேண்டிய உதவியை தாராளமாக செய்தலும்; குலன் உடையான் கண்ணே உள = (மேலே சொன்ன அந்த இரண்டு செயல்களும்) நல்ல குடிபிறந்தானிடம் இருக்கும்
வேறு வகையில் பொருள்: இலன்என்னும் எவ்வம் உரையாமை ஈதல் =
1. இல்லை என்று இரப்பவன் சொல்லும் முன்னே குறிப்பறிந்து கொடுத்தல்;
2. என்னிடமும் கொஞ்சம் முடையாதான் இருக்கு இருந்தாலும் கொடுக்கிறேன் என்று பஞ்சப்பாட்டு பாடாமல் கொடுத்தல்;
3. இரப்பவன் இன்னொருவரிடம் சென்று இதேபோல் கேட்கும் நிலை அவனுக்கு வராமல் கொடுத்தல்…
ஒருவருக்கு உதவும் போது தவிர்க்க வேண்டிய குற்றங்கள் ஐந்து; அவையாவன:
1. மரியாதையில்லாமல் கொடுத்தல்;
2. தாமதமாக கொடுத்தல்;
3. முக்கியத்துவம் இல்லாமல் கொடுத்தல்;
4. திட்டிக்கொண்டே கொடுத்தல்;
5. கொடுத்த பின் வருந்துதல்.
இல்லையெனாது கொடுப்போம்.
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன். உங்கள் அன்பு மதிவாணன்.
Comments