அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:
இன்பம் துய்ப்பது இலறத்தானுக்கு உண்டு. என்ன, அந்த இன்பங்கள் அற எல்லைகளுக்குள் இருக்க வேண்டும். அதனை, குறள் 39 இல் தெளிவுபடுத்திவிட்டார். காண்க 24/02/2021 (38). மீள்பார்வைக்காக:
“அறத்தான் வருவதே இன்பம்மற் றெல்லாம் புறத்த புகழு மில.” ---குறள் 39; அதிகாரம் – அறன் வலியுறுத்தல்
அறத்தால் வருவதே இன்பம்; அறமல்லாதது எல்லாம் தள்ளத்தக்கன; புகழும் கிடைக்காது.
இதைத்தான், அற எல்லைகளுக்குள் இருக்கும் மற்றைய இன்பம் விழைபவர் சிற்றின்பம் வெஃகி அறமல்லாதவற்றைச் செய்யார் என்றார் குறள் 173 இல். காண்க 07/11/2023.
இன்ப நுகர்ச்சி புலன்களின் முலம் நிகழும். புலன்களைக் கட்டுப்பாட்டில், அஃதாவது, அற எல்லைக்குள் வைப்பது இல்லறத்தானுக்குக் கடமை.
புலன்களை ஒடுக்குவது துறவறத்தார்க்குக் கடமை. இதனை மிக அழகாகத் துறவு என்னும் அதிகாரத்தில் குறள் 341 இல் சொன்னார். காண்க 28/02/2021 (42). மீள்பார்வைக்காக:
‘யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன்.” ---குறள் 341; அதிகாரம் – துறவு
சரி, நாம் மீண்டும் வெஃகாமைக்கு வருவோம்.
அன்மை என்றால் நமக்குத் தெரியும். அல்+மை; அஃதாவது இல்லாதது அமைந்திருத்தல், அற்றுப் போதல், விலகி நிற்றல்.
புன்மை என்றால் புல் + மை. புல் என்றால் கீழான என்று பொருள். புல் என்றால் உயிர்களில் கீழானதையும், அஃதாவது, ஓர் அறிவுடையதையும் புல் என்கிறோம்.
புன்மை என்றால் கீழானது அமைந்து இருப்பது, அற எல்லைகளை மீறிய பார்வையோடு இருப்பது.
புன்மையில் = புல்+மை+இல். இஃது, கீழான எண்ணங்களில் இருந்து விலகி இருப்பது.
சரி, நாம் குறளுக்கு வருவோம்.
“இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற
புன்மையில் காட்சி யவர்.” --- குறள் 174; அதிகாரம் – வெஃகாமை
புலம் வென்ற புன்மையில் காட்சியவர் = புலன்களை வென்று தன் கட்டுபாட்டுக்குள் வைத்துக் கொண்டும் கீழான எண்ணங்களில் இருந்தும் விலகி நின்றும் பார்க்கத் தெரிந்தவர்கள்; இலம் என்று வெஃகுதல் செய்யார் = தம்மிடம் ஒன்றும் இல்லை என்றாலும் பிறர் பொருளைக் கவர நினையாமல் இருப்பவர்களாவர்.
புலன்களை வென்று தன் கட்டுபாட்டுக்குள் வைத்துக் கொண்டும் கீழான எண்ணங்களில் இருந்தும் விலகி நின்றும் பார்க்கத் தெரிந்தவர்கள், தம்மிடம் ஒன்றும் இல்லை என்றாலும் பிறர் பொருளைக் கவர நினையாமல் இருப்பவர்களாவர்.
புன்மையில் காட்சி என்றால் திரிபறத் தெளிந்த பார்வை. அஃதாவது, எது தமக்கு விதிக்கப்பட்ட அறம், எது அறமன்று என்ற திரிபில்லாத பார்வை.
ஒரு நூலைக் கற்கும்போது ஐயம், திரிபு, மயக்கம் இன்றிக் கற்க வேண்டும் என்பார்கள். ஐயம் என்பது “அதுவோ இதுவோ” என்று எண்ணுவது; திரிபு ஒன்றை மற்றொன்றாகப் பார்ப்பது; மயக்கம் என்பது பொருளைச் சரியாக உணராமல் மயங்குவது.
நம்மாளு: ஐயா, நம்ம பேராசான் “இலமென்று” இரு குறள்களை ஆரம்பித்துள்ளார். இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின் நிலமென்னும் நல்லாள் நகும் என்று குறள் 1040 இல் சொல்லியிருக்கிறாரே, ஆதலினால் நான் வெஃகுவதில் தவறு எங்கே இருக்கிறது என்றால் அது மயக்கம் தானே?
ஆசிரியர்: அந்தக் குறளை உழவில் சொல்லி இருக்கிறார். உழவு செய்பவர்கள் நிலத்தினை உழுது பயன் பெறுவதை விட்டுவிட்டு என்னிடம் ஒன்றும் இல்லையே என்று வெறுமனே உட்கார்ந்திருப்பவர்களைப் பார்த்துச் சொன்னது. இருப்பினும் நீங்கள் சொன்னக் கருத்தும் சரிதான். உழவும் பொருள் செய்வதுதான். அதன் பயனும் இன்பம்தானே!
மேலும் வினைத்தூய்மையில் சொல்லியிருப்பதையும் நாம் பார்த்துள்ளோம். காண்க 04/08/2022 (523), 25/04/2023 (782).
“ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை.” --- குறள் 656; அதிகாரம் – வினைத்தூய்மை
இதைவிட அறத்தை வலியுறுத்திச் சொல்வது எங்கனம்?
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன் உங்கள் அன்பு மதிவாணன்.
Comments